கோயில்களில் ஒரு அம்பாள் சன்னதி மட்டுமே இருக்கும். அபூர்வமாக சில தலங்களில் இரண்டு சன்னதிகள் இருக்கும். கும்பகோணம் அருகிலுள்ள திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயிலிலும் இரண்டு அம்பிகையர் உள்ளனர். சோழ மன்னன் ஒருவனுக்கு அருள்புரிவதற்காக சிவனும், அம்பாளும் மருத்துவ தம்பதியர் வடிவில் சென்று அருளிய தலம் இது. இக்கோயிலை மன்னன் திருப்பணி செய்தபோது, முதலில் இருந்த அம்பாள் சிலையை காணவில்லை. எனவே, மன்னன் புதிதாக ஒரு அம்பாளை பிரதிஷ்டை செய்தான். அருமருந்து நாயகி என்றும் பெயர் வைத்தான். ஆனால், சில நாட்களிலேயே காணாமல் போன சிலை மீண்டும் கிடைக்கவே, அந்த அம்பாளையும் அருமருந்துநாயகி சன்னதி அருகிலேயே பிரதிஷ்டை செய்தான். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்படுகிறாள். நீண்ட நாட்களான நோயால் தவிப்பவர்கள் சுவாமிக்கும், அருமருந்து நாயகிக்கும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, சாப்பிட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.