பதிவு செய்த நாள்
22
ஜூன்
2021
05:06
கோவை : பெருந்தொற்று சூழ்நிலையை எதிர்கொள்ள, சமநிலையான மனதும், உயிரோட்டமான உடலும் தரக்கூடிய, மிக எளிமையான பயிற்சியை யோகா வாயிலாக பெற முடியும், என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
உலக யோகா தினத்தையொட்டி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: இந்த ஆண்டு உலக யோகா தினம், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா பெருந்தொற்று, நம் தலைமுறையின் வாழ்க்கையை எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. நல்ல எதிர்ப்பாற்றல் கொண்ட உடலையும், துடிப்பும், சமநிலையும் கொண்ட மனதையும், நாம் உருவாக்கி கொள்வது மிகவும் முக்கியம்.
ஆரோக்கியம் மற்றும் உடல், மன நலன்கள், நமக்குள் இருந்து தான் வர முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த பெருந்தொற்று சூழ்நிலையை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய, சமநிலையான மனதும், உயிரோட்டமான உடலும் தரக்கூடிய மிக எளிமையான பயிற்சிகளை இணையத்தில், ஈஷா சார்பில் இலவசமாக வழங்கி உள்ளோம். இந்த உலக யோகா தினத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் யோகாவின், சில அம்சங்களையாவது கொண்டு வர வேண்டும். இவ்வாறு, சத்குரு கூறியுள்ளார்.