பதிவு செய்த நாள்
19
ஜூன்
2012
11:06
கும்பகோணம்: கும்பகோணத்தில் விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்ஸவத்தின் உத்தர ஆராதனையை முன்னிட்டு, நேற்று விஜயேந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டண பிரவேச வீதியுலா நடந்தது. கும்பகோணத்தில் விஜயேந்திர தீர்த்தரின் ஆராதனை மகோத்ஸவ விழா கடந்த 16ம் தேதி பூர்வ ஆராதனையுடன் துவங்கியது. அதில் வேத பண்டிதர்கள், சிவன் கோவில், பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் 154 பேருக்கு பொன்னாடை அணிவித்து, சமய பணிகளை பாராட்டி பொற்கிழி, பொன்னாடை மந்த்ராலயம் மடத்தின் சார்பில் வழங்கப்பட்டது. ஆப்த காரியதரிசி ராஜா ராஜகோபாலாச்சார், கூடுதல் ஆப்த காரியதரிசி சுயமேந்திராச்சார் ஆகியோர் பொற்கிழியை வழங்கினர். பின்னர் கோவில் காஷ்யப திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் (17ம் தேதி) இரண்டாவது நாளாக முக்கிய விழாவான மத்ய ஆராதனை விழா நடந்தது. அதில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கவசம் பக்தர் ஒருவரால் உபயமாக அளிக்கப்பட்டு விஜயேந்திரரின் மூல பிருந்தாவனத்துக்கு அணிவிக்கப்பட்டது. இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய தரிசனம், அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள், வேத கோஷங்கள் முழங்க தாஸரூ பக்தி பாடல்கள் பாடினர். இரவு பிரபல வித்வான்களின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள், சங்கீத கச்சேரிகள், புரந்தர தாசர் கீர்த்தனைகளை விஜயேந்திர பஜனை மண்டலியினர் பாடினர். வேத வல்லுனர்களின் உபன்யாசங்கள் நடந்தது. நிகழ்ச்சிகளில் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று (18ம் தேதி) உத்தர ஆராதனை நடந்தது. இதையொட்டி நேற்று காலை விஜயேந்திர சுவாமிகளின் திருவுருவ சிலை பட்டண பிரவேச வீதியுலா நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் மேலாளர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர்கள் உமர்ஜி மாதவன், விஷ்ணு பாலாஜி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.