ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே எஸ்.அத்திக்கோம்பையில் 146 ஆண்டுகளாக நடந்துவந்த கால்நடை கண்காட்சி கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோடு, எஸ். அத்திக்கோம்பையில் உச்சி மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் உற்சவ திருவிழாவை முன்னிட்டு மாட்டுத்தாவணி எனப்படும் கால்நடை திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் காங்கேயம், மணப்பாறை தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் காளைகள், வளர்ப்பு கன்றுகள், பசு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.இப்பகுதி விவசாயிகளுக்கு மாடுகளை விற்க, வாங்க ஒரு சந்தை வாய்ப்பாக இருந்தது. இதையொட்டி ஆனி மாதம் முதல் வாரத்தில் கண்காட்சி களைகட்டத் தொடங்கிவிடும். ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனோ காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கால்நடை கண்காட்சி நடைபெறவில்லை.கோயில் டிரஸ்டிகள் தங்கமுத்து, ரவீந்திரன் கூறியதாவது: 146 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள அத்திக்கோம்பை மாட்டுத்தாவணி கொரோனா பரவலால் இந்தாண்டும் பாதித்தது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமே, என்றனர்.