பதிவு செய்த நாள்
30
ஜூன்
2021
09:06
மதுரை : கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவரது ஆட்கள் கட்டிய வணிக கட்டடத்தை அகற்ற கோரிய வழக்கில், சம்பந்தப்பட்டோருக்கு அரசு அவகாசம் அளித்து உள்ளது.
அதன்படி அகற்றாவிடில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணைச் செயலர் சேங்கைமாறன் தாக்கல் செய்த மனு:சிவகங்கை கவுரி விநாயகர் கோவில், அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, காஞ்சிரங்கால் மகா சிவனேந்தலில் 9 ஏக்கர் 58 சென்ட் புஞ்சை நிலம் உள்ளது. இதை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அவரது ஆட்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆக்கிரமித்தனர். அதில் வணிக வளாக கட்டடம் கட்ட துவங்கினர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை கோரி சிவகங்கை கலெக்டர், அறநிலையத் துறை இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால், கட்டடத்தை அகற்றவில்லை. ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி உத்தரவு: ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள சம்பந்தப்பட்டோருக்கு அறநிலையத் துறை, 12 வாரம் அவகாசம் அளித்துஉள்ளது. அதன்படி அகற்றாவிடில், அறநிலையத் துறையே நடவடிக்கை எடுக்கலாம்.ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அதற்குரிய செலவு தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலித்துக் கொள்ளலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.