பதிவு செய்த நாள்
01
ஜூலை
2021
09:07
கடந்த ஆட்சியில் அறநிலையத் துறை, செயல்படாத பொம்மையாக இருந்ததற்கான அடையாளம் தான், சென்னை வடபழநி ஆதிமூலப் பெருமாள் கோவில். பழமைவாய்ந்த இந்த கோவிலுக்கு, 60 ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்துள்ளனர். இதை நேற்று கேள்விப்பட்ட, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலுக்கு உடனே சென்று, ‘‘இந்த ஆண்டே கும்பாபிஷேகம் நடத்தப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கோபுரத்தின் முன்புறச் சாலையில் இடது பக்கமாக, பூக்கடைகளின் பின்னணியில், யாருடைய பார்வையிலும் படாதபடி இருக்கிறது, ஆதிமூல பெருமாள் கோவில்.இது 200 ஆண்டுகள் பழைமை கொண்டது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இந்தக் கோவிலை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த கோவில் இருப்பதே தெரியாத அளவிற்கு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடு:கோவிலின் சுற்றுச் சுவரில் ஓட்டை போட்டு, அதன் வழியாகத் தான் தற்போது பக்தர்கள் சென்று வருகின்றனர். கோவிலை சீரமைத்து, பக்தர்கள் பெருமாளை வழிபட வகை செய்ய வேண்டும் என்று, பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.நேற்று காலை 9:00 மணியளவில், அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், ஆதிமூல பெருமாள் கோவில் தக்கார் சித்ராதேவி, அறநிலையத் துறை இணை ஆணையர் ஹரிபிரியா, எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, வேலு ஆகியோர் வந்தனர். பெருமாளை தரிசனம் செய்த அமைச்சர், அங்கு இருந்த பட்டாச்சாரியார்களிடம், கோவிலின் பெருமைகளையும் தற்போதைய நிலைமைகளையும் கேட்டறிந்தார்.
பின், கோவிலை மறைத்து பூக்கடை போட்டிருந்தவர்களிடம், ‘‘முருகனுக்கு மூத்தவரான பெருமாள் கோவில் இருப்பதே தெரியாதபடி மறைத்து, கடை போட்டிருப்பது நியாயமில்லை; உங்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு இடத்தில் கடைகள் போட ஏற்பாடு செய்கிறோம். இந்த இடத்தை காலி செய்து விடுங்கள்’’ என்றார்.
நடவடிக்கை:பின், கோவில் தெப்பக்குளம் பகுதியைச் சுற்றிலும், ‘பார்க்கிங்’ பகுதியைப் போல வாகனங்கள் நிறுத்தியிருப்பதை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். குளத்தை ஒட்டியுள்ள காரிய கூடம், பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல், வேறு இடத்திற்கு மாற்றப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:கடந்த ஆட்சியின் போது செயல்படாமல் இருந்த பல துறைகளில், அறநிலையத் துறையும் ஒன்று என்பதற்கான அடையாளம் தான், இந்த ஆதிமூல பெருமாள் கோவில்.இந்தக் கோவிலை யாருமே கண்டுகொள்ளாமல் விட்டது, பெரும் வருத்தத்திற்கு உரியது. கும்பாபிஷேகம் நடத்தி, 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்று கேள்விப்படும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது.நடப்பு ஆண்டிலேயே, இங்கு மிகச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்படும். இந்த கோவிலில் பணியாற்றும் பட்டாச்சாரியார்கள் உட்பட ஆறு பேரும், நிரந்தர ஊழியர்கள் ஆக்கப்படுவர். இந்த கோவிலை மறைத்து கட்டப்பட்டுள்ள கடைகள் அகற்றப்படும். கோவில் நிலத்தில் நீண்ட காலம் குடியிருப்பவர்களுக்கு பட்டா போட்டுத் தரப்படும் என்று, எப்போதுமே நான் சொல்லவில்லை. கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களின் மீட்பு நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
கதிர் உதயம் நோக்கிகாட்சி தரும் பெருமாள்!: எளிமையான இந்த வைணவ ஆலய கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூல பெருமாள். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு, தாமரை மலர் மீது வைத்தபடி அருள்புரிகிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும், புன்னகை மிளிர, காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார். இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து, அருள் மழை பொழிகின்றனர். இங்கே உற்சவ மூர்த்தியாக, கஜேந்திர வரதபெருமாள் பேரருள் புரிகிறார். எனவே, இத்தலம் மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக் கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.வடபழநி, ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூல பெருமாள் கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. குழந்தைப் பேறு வழங்கும் சந்தானகோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், கர்ப்பிணிகளின் கருவைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்ப பிரச்னைகள் நீங்கி, இனிமை நிலவ செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரச மரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே, நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு துயரங்களுக்கும் பரிகாரம் தரும் இடமாக, இத்தலம் இருக்கிறது.