பதிவு செய்த நாள்
03
ஜூலை
2021
06:07
எதிரிகளின் தொல்லை இருக்கக் கூடாது. என்னும் பலனைக் கருதிச் செய்யப்படும் வேண்டுதலே பிள்ளையாருக்கு முன்பாக சதுர்காய் என்னும் விடலைத் தேங்காய் உடைத்தல் என்னும் வேண்டுதல். உடைக்கப்படும் தேங்காய் குறைந்தபக்ஷம் நான்கு பகுதிகளுக்கு மேலாக உடைபட வேண்டும் என்பதனால் இதை சதுர்காய் உடைத்தல் என்றும் கூறுவார்கள். ஒரு சமயம் பிள்ளையாரிடம் அவரது தந்தை சிவபிரான். குழந்தையே! உனக்கு என்ன வேண்டும். கேள் தருகிறேன். என்று கேட்க, பிள்ளையாரும் விளையாட்டாகவே. சிவபிரானைப் பார்த்து, நான் விளையாடுவதற்கு மூன்று கண்களுள்ள உங்களுடைய தலை வேண்டும் என்று கேட்டார். சிவனும் தன்னைப்போலவே மூன்று கண்களுடன் தேங்காயை ஸ்ருஷ்டி செய்து, அதை பிள்ளையாரின் முன்பாக உடைத்து தனது வாக்கைக் காப்பாற்றி பிள்ளையாரை மகிழ்வித்தார் என்கிறது முத்கல புராணம்.
அதுமுதல் தோப்புக்கரணம் போடுதல், தலையில் குட்டிக் கொள்ளுதல் போன்ற செயலைப் போலவே சதுர்காய் என்னும் விடலைத் தேங்காய் உடைத்தலும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானதாகவும், மகிழ்விப்பதாகவும் அமைந்து விட்டது. யார் ஒருவர் தாம் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து, விடுபட வேண்டும் என்று எண்ணுகிறாரோ அவர் பிள்ளையாருக்கு விடலைத் தேங்காய் உடைத்தல் என்னும் வேண்டுதலைச் செய்யலாம்.
இவ்வுலகில் வாழும் மனிதர்களோ, மிருகங்களோ நமக்கு எதிரிகள் அல்ல. மாறாக, நமது உள்ளத்திலுள்ள ஆசை,கோபம், மதம், பொறாமை, அஹங்காரம் முதலியவைகளே நமக்கு உண்மையான எதிரிகள் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு பிரார்த்தனையாக உடைக்கப்படும் விடலைத் தேங்காயை, நாம் எடுத்து சமைத்து சாப்பிடுவதோ அல்லது அந்தத் தேங்காயை அப்படியே சாப்பிடுவதோ சரியான செயலல்ல. அவ்வாறு செய்வதால் தீய சக்திகள் சுக்கு நூறாக உடைபட வேண்டும் என்னும் நமது எண்ணம் நிறைவேறாது. முழுமையான பலன் நமக்குக் கிட்டாது. ஆகவே, விடலைத் தேங்காயை உபயோகிப் பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், சுமார் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அதாவது அவர்கள் மட்டும் விடலைத் தேங்காயை எடுத்து அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளிடம் அதிக கருணையுள்ள குழந்தை தெய்வமான பிள்ளையார் குழந்தைகளுக்காகக் காட்டும் கருணை இது.