பதிவு செய்த நாள்
03
ஜூலை
2021
06:07
ஒவ்வொரு கோயில் நுழைவாயிலின் அருகே கொடிமரத்துக்கு அருகே அமைந்திருக்கும் ஓர் மேடையே பலிபீடம் எனப்படுகிறது. இது பொதுவாக கிழக்கு வாசலுக்கு அருகே அமைந்திருக்கும். தினசரி, ஒவ்வொரு வேளையும், கோயிலின் கர்ப்பக்கிரகத்திலும் (கருவறைக்குள்ளும்) மற்றும் சுற்றுப்பகுதியிலும் இருக்கும் தெய்வங்களுக்கு பூஜைகள் நிவேதனங்கள் செய்து முடிந்த பின்னர், கொடிமரத்தின் அருகிலுள்ள பலிபீடத்தில் (கிழக்கு திசையில்) துவங்கி, கோயில்களைச் சுற்றி எட்டு திசைகளிலும், தெய்வத்துக்கு நிவேதனம் செய்த அன்னம் முதலான பொருட்களால் பலிகள் போடப்பட வேண்டும். இவ்வாறு போடப்படும் பலியானது கோயிலுக்குள் நடமாடும் பக்தர்களுக்கு இடையூறின்றியும், கால்களிலும் மிதிபடாதவாறும் இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே கொடிமரத்தின் அருகே பலிபீடம் என்னும் ஓர் மேடை (கருங்கல்லால்) அமைக்கப்பட்டு அதன் நடுவில் ஓர் கருங்கல் பதிக்கப்படுகிறது. இதில் தினசரி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் சில சக்திகளுக்கு பலிகள் போடப்படுவதால் இது பலிபீடம் எனப்படுகிறது.
இந்த பலிபீடத்தை (அர்ச்சகரைத் தவிர) யாரும், எப்போதும் கைகளால் தொடக் கூடாது. அறியாமல் தொட்டு விட்டால் உடனேயே குளியல், கை அலம்புதல் முதலியவற்றால் சுத்திப்படுத்திக் கொள்ள வேண்டும். கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் இந்த பலிபீடத்தின் அருகே கால்கள், கைகள் பூமியில் படுமாறு விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இவ்வாறு நமஸ்காரம் செய்யும் போது தங்களிடமுள்ள தீய குணங்களை இறைவனுக்கு பலியாகப் போட்டு விடுவதாக மனதில் எண்ண வேண்டும். அசுத்தம் என்பது இருவகைப்படும். ஒன்று, நமது கண்ணுக்குப் புலப்படும் குப்பைகள், தூசிகள் போன்ற அசுத்தப் பொருட்கள், மற்றொன்று, நமது கண்களுக்குத் தெரியாமல் நமது உடலுக்குள்ளேயே உணர்ச்சி வடிவாக அமைந்திருக்கும் காமம் (ஆசை), குரோதம் (வெறுப்பு), லோபம், மோகம், மதம் (அகங்காரம்), மாத்சர்யம்(பொறாமை), பயம் போன்றவை இவை நமது உடலையும் மனதையும் அசுத்தப்படுத்தி நம்மை தீய வழியில் செலுத்தி, தீமையை விளைவிக்கச் செய்பவை. ஆகவே, இப்படிப்பட்ட தீய உணர்வுகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
கண்களுக்குப் புலப்படும் அசுத்தங்களைப் பெருக்கி வெளியேற்றி நாம் வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். உடல் மீது படர்ந்துள்ள அழுக்கு போன்றவற்றையும் குளிப்பதன் மூலம் விலக்கிக் கொள்கிறோம். ஆனால், மனதில் உள்ள அசுத்தங்கள் அப்படியே இருக்கின்றனவே, ஆகவே, நமது உடலுக்குள்ளேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கும் நான் என்னும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற தீய உணர்ச்சிகளாகிய குப்பைகளையும், அசுத்தங்களையும் நமது சக்தியால் விலக்க முடியாது. தெய்வ அருளால் மட்டுமே இவற்றை விலக்கி வைக்க முடியும். ஆகவே, மனதில் காணப்படும் அசுத்தங்களை கோயில் சென்று இறைவன் சன்னிதியின் முன் இருக்கும் பலிபீடத்தில் பலியாகப் போட்டுவிட வேண்டும். இந்த மனோபாவத்துடன் பக்தர்கள் பலி பீடத்தின் அருகில் இரு கால்களையும் நீட்டி, உடலை இறைவன் முன் சமர்ப்பித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். (கோயில் கொடிமரத்தின் - பலிபீடத்தின் முன் பகுதியைத் தவிர மற்ற எந்தப் பகுதியிலும் நமஸ்காரம் செய்யக் கூடாது.) பக்தர்கள் தரும் இந்த பலியை பெற்றுக் கொள்வதற்காகவே கோயிலின் கருவறைக்குள் இருக்கும் இறைவன், தனக்கு நேர் எதிரே பலிபீடத்தை வைத்துக் காத்திருக்கிறார். பக்தன் தனக்கு முன்பாக, அன்னம் (சாதம்), எலுமிச்சம்பழம், பூசணிக்காய் போன்ற பொருட்களை பலியாகத் தருவதைக் காட்டிலும், மனதிலுள்ள போட்டி, பொறாமை, ஆணவம் போன்ற தீய உணர்ச்சிகளை பலியாக சமர்ப்பிப்பதையே இறைவன் மிகவும் விரும்புகிறார்.