இறைவழிபாட்டில் மிக முக்கியமான அங்கமாகத் திகழ்வது தீப ஆராதனை. மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் நடராஜர் அபிஷேகத்துக்குப் பின் ரதாரத்தி நடக்கும். அடுக்கு தீபத்தை சாபுதாளம் - பைரவி ராகத்துடன் தாள லயத்துடன் ஆடிக் கொண்டே நடக்கும் தீபாராதனை - தாண்டவ தீப ஆராதனை. கருவறையில் சிவலிங்கத்துக்கு முன்னுள்ள தீபங்களால் லிங்கத்தின் நிழல் பின்னால் விழாமல் தடுக்க - லிங்கத்தின் பின் பக்கத்தில் எரியும் தீபம் - ஈசான தீபம். கோயில்களில் கல் தூணை நட்டு அதன் மேல் விளக்கு ஏற்றி வைப்பர் - இது ஸ்தம்ப தீபம். வீடுகளிலும் உயரமான கட்டையில் விளக்கேற்றினால் சிறந்த பலனைத் தரும். கருவறை வாயிலில் மகர தோரணங்களை ஒட்டி தீபங்களை வரிசையாக அமைத்தல் - தோரண தீபம் அல்லது சரவிளக்குகள். இது திருவண்ணாமலை, திருவிடை மருதூர், மயிலாப்பூர் கோயில்களில் விசேஷம்.
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபம். இது, ஆண்டுதோறும் மயிலாப்பூரில் நடக்கிறது. அரிசியுடன் நாட்டு சர்க்கரை கலந்து மண் சட்டியில் வைத்து நெய் விளக்கேற்றி, கற்பூரம் காட்டி வணங்கியபின் தலையில் வைத்துக் கொண்டு வலம் வரும் வழக்கம் சில கோயில்களில் நடக்கிறது. இறைவனுக்கு நட்சத்திரங்கள் தீபமாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால், வட்டதட்டில் 27 தீபங்கள் வைத்து தீபாராதனை காட்டுவர். இது நட்சத்திர தீபம்.