பதிவு செய்த நாள்
11
ஜூலை
2021
06:07
திருச்சி: கோவில்களில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை, ஒரு மாதத்துக்குள் நிரந்தரமாக்குவோம், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று ஆய்வு நடத்திய பின், அவர் அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில், கோவில்களில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களை நிரந்தரமாக்கி, காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என, சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தனர். போகிற போக்கில் அறிவித்து, செயல்படுத்தாமல் விட்டுச் சென்ற அந்த அறிவிப்பை, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை, ஒரு மாதத்துக்குள் நிரந்தரமாக்குவோம். கருணை அடிப்படையிலான பணிக்கு காத்திருப்பவர்களை, பணி நியமனம் செய்யவும், ஓய்வூதியம் கோருபவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, 1866ம் ஆண்டு, 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே உள்ளது. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள், கோவில் நிர்வாகத்துக்கு மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கொரோனா மூன்றாவது அலை வரும் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் கோவில்களில் அன்னதானம் வழங்குவதை தவிர்த்து, பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், இவ்வாறு, அவர் கூறினார்.