கோவை: கோவில்களில் திருவிழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளாலும், டாக்டர்களின் கடின உழைப்பாலும் கொரோனா நோய் கட்டுக்குள் வந்தது.இதையடுத்து அரசு தளர்வு வழங்கியதால் இயல்பு வாழ்கை தொடர்ந்து வருகிறது. கோவில்களும் திறக்கப்பட்டு வழிபாடுகளும் நடந்து வருகிறது.இருப்பினும், கிராமங்களில் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன், கருப்பராயன் உள்ளிட்ட கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. கிராமக்கோவில் வழிபாடு மிக முக்கியம். இக்கோவில்களில் திருவிழா எடுப்பதன் வாயிலாக, நாட்டில் மழை வளம், விவசாயம், கல்வி தொழில் ஆகியவை செழிக்கும். எனவே, கிராமக் கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.