பதிவு செய்த நாள்
25
ஜன
2026
11:01
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச தேர்த்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கருமத்தம்பட்டி, விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் முன்னிலையில், வேதமந்திரங்கள் ஒலிக்க, கொடியேற்றம் செய்து, மகாதீபாராதனை செய்தனர். தினசரி சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து, 31ம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சியும், பிப்., 1ம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், நாளை கொடியேற்றத்துடன், தைப்பூச தேர்த்திருவிழா துவங்குகிறது. தினசரி பூஜைகளை தொடர்ந்து, வரும், பிப்., 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், தேரோட்டம் நடைபெற உள்ளது.
அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில்; ஊத்துக்குளி கதித்தமலை ஸ்ரீவெற்றி வேலாயுதசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவில் உட்பட, மாவட்டத்தில் உள்ள முருகர் கோவில்களில், நாளை கொடியேற்றத்துடன், தைப்பூச தேர்த்திருவிழா துவங்குகிறது. தினமும் இரண்டு வேளையும் சுவாமி புறப்பாடும், 31ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவமும், பிப். 1ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது.