பதிவு செய்த நாள்
14
ஜூலை
2021
11:07
பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில், விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில், பொங்காளியம்மன், மாகாளியம்மன், அருளானந்த ஈஸ்வரர், வேணுகோபால கிருஷ்ணர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்கள், நுாற்றாண்டு பழமை வாய்ந்தவை. ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும்; பெரும்பாலான கோவில்கள், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், கோவில்கள் சிதிலமடைந்து வருகின்றன.பக்தர்கள் கூறுகையில், கோவில்கள் சிதிலமடைந்து வரலாற்று சிறப்புகள் அழிந்து வருகின்றன. கடந்த ஆண்டு, பிரசித்தி பெற்ற கடைவீதி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது, கோவில் கமிட்டியும் அமைக்கப்பட்டது.கொரோனா பாதிப்பு காரணமாக, பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.