Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » திரிசூல ஸ்தாபன விதி
படலம் 69: திரிசூல ஸ்தாபன விதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
04:06

69வது படலத்தில் திரிசூலஸ்தாபன விதி கூறப்படுகிறது. முதலாவதாக லக்ஷண முறைப்படி திரிசூலஸ்தாபனம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு ஸ்வர்ணம், வெள்ளி, தாமிரம், இரும்பு இவைகளில் ஏதாவது ஒரு பொருளால் திரிசூலம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு திரிசூல லக்ஷணத்தை கூறிய பிறகு சூலத்திற்காக எந்த விருக்ஷங்கள் முன்பு சொல்லப்பட்டதோ அவைகள் இங்கு கிரஹிக்கப்படவேண்டும் என்று விருக்ஷங்களாலும் திரிசூலம் செய்யலாம் என விளக்கப்படுகிறது. கற்பகிரஹ அளவால் திரிசூலத்தின் அளவு குறிப்பிட்டு, வாயில் படியின் அளவினாலோ, தூண்களின் உயர அளவினாலோ செய்யப்படவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கை அளவாலும் திரிசூலம் செய்யலாம் என அறிவிக்கப்படுகிறது. பிறகு திரிசூல விஷயத்தில் யவுகிகம், லவுகிகம், என்று இருவிதம் உண்டு என கூறி அதன் லக்ஷண அமைப்பு கூறப்படுகிறது. திரிசூலவிஷயத்தில் முதலில் மத்யபத்திரத்திற்கும் இருபக்கமும் உள்ள பத்திரத்திற்குமாக செய்முறை விளக்கப்படுகின்றன. பத்திரத்தின் அடிபாகத்தில் பாதமும், பாதத்தின் அடிபாகத்தில் பாலிகையும் அல்லது பெண், சிங்கம் போன்ற அமைப்பும் தண்டம் அமைக்கும் முறை இம்மாதிரியான திரிசூல உருப்பு செய்யும் முறைக் கூறப்படுகிறது. பிறகு மத்யபத்திரத்தின் மத்தியில் தாமரை பூ அமைக்கவும் அல்லது மத்யபத்திரத்தின் அடிபாகத்தில் அம்பாளுடனோ, அம்பாள் இல்லாததாகவோ விருஷபாரூட மூர்த்தியையோ அல்லது விருஷபருடனோ, விருஷபம் இல்லாததாகவோ வேறு மூர்த்தியை அமைக்கவும். அல்லது லோகேசர்களை அவர்களின் ஆயுத லக்ஷணபடியாகவாவது விருப்பப்பட்ட அளவிலாவது அமைக்கவும். மத்ய பத்ரவிஷயத்தில் தேவதையை பூஜிக்கும் முறைகூறி அல்லது பாலிகைகளின் ஆக்னேய கோணத்தில் அரசிலை போல் நான்கு அமைக்கவும் என கூறப்படுகிறது. இந்த அரசிலை அமைப்பு இல்லாமலும் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு பாலிகையின் மேல் நான்கு மூலையிலும் விருஷபத்தை அமைக்கவும் என கூறப்படுகிறது.  பிறகு கருங்கல், மண் இவைகளால் சூலம் செய்யும் விஷயத்தில் ஒரு சில விசேஷம் இருப்பதாக கூறி அந்த விசேஷம் விவரிக்கப்படுகிறது.

இவ்வாறு திரிசூல லக்ஷணம் கூறி திரிசூலத்தை ஆலய விருஷபத்தின் முன்பாகம் பின்பாகம் பலிபீடத்தின் முன் பாகமோ, ஸ்தாபிக்கவும் என கூறி திரிசூலத்தை பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்டுள்ளபடி நல்ல, நக்ஷத்திர கிழமைகளோடு கூடிய காலத்தை பரீசிட்சித்து அங்குரார்பணம் செய்து திரிசூலத்தின் மேல் பாகம், கீழ் பாகம், தண்டம் இவைகளுடன் அஷ்டபந்தனத்தால் நன்கு சேர்க்கவும் ரத்னன் நியாசமும், நயனேன் மீலனமும் செய்யவேண்டாம் என கூறப்படுகிறது. அசலஸ்தாபனமாய் இருப்பின் ரத்னன்நியாசம் செய்யவும். பிறகு அந்த சூலத்தில் பிரதிமைகள் இருந்தால் அதற்கு நயனோன்மீலனம் செய்து, மண் இவைகளால் சுத்தி செய்து கிராமப் பிரதட்சிணம் செய்து ஜலாதிவாசம் செய்யவேண்டும் என ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் கூறப்படுகின்றன. பிறகு முன்பு மாதிரியே யாக சாலை அமைத்து மண்டபம் குண்டம் வேதிகை அமைத்து அங்கு சில்பியை திருப்தி செய்வித்து பிராம்மண போஜனம் புண்யாக பிரோக்ஷணம், வாஸ்த்து ஹோமம் செய்து, வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து அண்டஜம் முதலான சயன திரவ்யங்களால் சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வந்து திரிசூலங்களை ஸ்நானம் செய்வித்து திரிசூலத்திற்கு பத்மம், மூன்று, பத்திரம் தேவபிம்பம், விருஷபம், இவர்களுக்கு ரக்ஷõபந்தனம் செய்வித்து அவைகளை சயனத்தில் கிழக்கே தலைவைத்து மேல் நோக்கிய முகம் உடையதாக சயனம் செய்விக்கவும். வெள்ளை சிவப்பு வஸ்திரங்களால், அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பிம்பங்களை மூடவும் என சயனாதிவாச முறை விளக்கப்படுகிறது. பிறகு திரிசூலத்தின் சிரோதேசத்தில் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளை உடைய ஒரு கும்பம் ஸ்தாபித்து அதில் சிவாஸ்திரத்தை பூஜிக்கவும் என கூறி தியானத்திற்காக சிவாஸ்திரத்தின் ரூபலக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமி, அம்பாள் பிரதிமை இருந்தால் அப்பொழுது சிவகும்பம், வர்தனி கும்பம் ஸ்தாபிக்கவும் விருஷபம் இருந்தால் அதற்கும் கும்பம் ஸ்தாபிக்க வேண்டும்.

கும்பத்தை சுற்றி எட்டு கும்பங்கள் ஸ்தாபித்து அதில் வஜ்ராதிகளை ஸ்தாபிக்கவும், தத்வ தத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் செய்யவும் திரிசூல விஷயத்தில் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு திரிசூலபத்ரத்தின் அங்கங்களில் ருத்ராதி தேவர்களை பூஜிக்கும் முறையும் கூறப்படுகின்றன. இவ்வாறு கும்ப அதிவாசமுறை நிரூபிக்கப்பட்டது. பிறகு திரவ்யங்களின் விபரங்களை கூறும் ஹோம முறை கூறப்படுகின்றது. கும்ப அதிவாச விதியில் கூறப்பட்ட ருத்திராதி தேவர்களின் பிரயோஜன்ம பிறகு கும்ப ஜலங்களால் திரி சூலத்தை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு ஸ்நபணமும் அதிகமாக நிவேதனமும் செய்யவேண்டும் சல பிம்பமாக இருப்பின் உத்ஸவம் செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும். பிறகு திரிசூலத்தை ஸ்தாபனம் செய்தவனுக்கு பலன்கள் கூறப்படுகின்றன. இவ்வாறாக 69வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. திரிசூலம் என்ற அஸ்த்ர தேவரை அதன் அமைப்பு முறைப்படி கூறுகிறேன். தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கற்சிலை முதலிய திரவ்யங்களாலோ அமைக்கலாம்.

2. கர்பக்ருஹத்தின் ஒன்பதின் ஓர் பங்கிலும், ஒன்பது பாகத்தில் மூன்று பாகம் வரையிலும், பெரிய அளவில் ஓர் பாகமும் சூலங்களின் அளவாக கூறப்படுகிறது.

3. மேற்கூறிய அளவுகளை எட்டாக பிரித்தோ பலவகையான அளவுகளாலோ வாயிற்படி, தூண்களின் அளவு முறைப்படியோ அளவை அறியலாம்.

4. இரண்டு முழ அளவிலிருந்து நான்கு முழம் வரையிலுமோ, ஜாத்யம்சம் என்ற அளவை முன்பு போல் செய்தோ அமைக்கவும்.

5. முப்பதம்சம் முதல் நூறு அம்சம் வரை எந்த அளவு கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும். சுபம் என்ற அளவுகளின் நிச்சயத்திற்காக ஓர் பாக அளவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

6. லவுகிகம், யவுகிகம் என்று சூலம் இருவகைப்படும். எஜமானன், அரசன் கிராமங்கள் இவைகளை அனுசரித்து செய்வது லவுகிகம் எனப்படும்.

7. ஆலயத்தின் ஜாதி, உயரம், அம்சம் இவைகளுடன் கூடியதும், ஈச்வரன், நக்ஷத்ரம் இவைகளை அனுசரித்தும் (11, 27 என்பதான அளவுடன் கூடியதும்) அங்குலம் முதலான அளவுகளால் நிர்மாணிக்கப்பட்டது என எது உண்டோ அது யவுகிக சூலம் எனப்படும்.

8. மற்றொரு லவுகிகம் வேறு ஆலயத்திலுள்ள பிம்பங்களை அனுசரித்தும் ஆகும். மற்றொரு யவுகிகம் வேறு நகரம் அவைகளினிடம் யஜமானனிவர்களை அனுசரித்தும் ஆகும்.

9. யவுகிகமானது வேறு இடத்தில் செய்யப்பட்டதாகவோ, பிம்பங்களில் அமைக்கப்பட்டதாகவோ இருக்கலாம். உயரத்தை பத்து பங்காக்கி ஒன்று, இரண்டு, மூன்று அளவுகளாலோ

10. அதன் நடுவில் எட்டில் ஓர்பங்காகவோ, நடுபத்ரத்தின் உயர அளவாகும். நான்கில் ஓர் பங்காகவோ, அதன் அளவை தனித்தனியாகச் செய்ய வேண்டும்.

11. கர்பக்ருஹ உயரத்தை முப்பது பங்காக்கி அதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்றும் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்ற அம்சங்களால் நடுபத்ரத்தின் விஸ்தாரமாகும்.

12. பத்ர அளவை நாற்கோண ஸமமாக ஏற்று செய்யவும். பத்ரத்தின் அளவை இரண்டு பக்கத்திலும் தள்ளி செய்யவும்.

13. அதில் இரண்டு பக்கத்திலும் வட்ட வடிவமாக பத்ர அளவை செய்யவும். நடுவிலுள்ள பத்ரத்தின் உயரம் போன்றே இரண்டு பக்கத்திலுமுள்ள பத்ரத்தின் உயர அளவை செயற்பாலது.

14. அல்லது நடுபத்ரத்திலிருந்து நான்கு, ஐந்து ஆறம்ச அளவை குறைத்தோ, கூட்டியோ இரண்டு பக்க பத்ர அளவை செய்யலாம். நடுபத்ரத்திற்கு வெளியும், உள்ளும் நடுக்கோட்டை சேர்ந்ததாகவோ அமைக்க வேண்டும்.

15. மேலும், கீழும் மெலிந்ததான அமைப்புடையதாக பக்கத்திலுள்ள இரண்டு பத்ரங்களை அமைக்கவும். பத்ரத்தின் அடிபாகம் பலமுள்ளதாக இருப்பதற்கு அடிபாகத்தை அதிகரிக்க வேண்டும்.

16. பத்ரத்தின் கீழ் பாகத்தை அழகுபடுத்தி, பத்ரத்தின் நுனியை மெலிந்ததாகச் செய்யவும். நுனியில் பத்ர உயரத்தினால் பாதியோ, கால் பாகமாகவோ

17. அதனிரு பக்கத்திலுள்ள பத்ர நுனிகளுக்கு அதிகமாகவோ நடுபத்ரத்தின் நுனியை முன்போ போன்றோ விசேஷமாகவோ அமைக்க வேண்டும்.

18. அவ்வாறே இரண்டு பக்க பத்ரங்களின் அடிபாக இடைவெளியும் முன்போலவே ஆகும். பத்ரத்தின் உயரத்தை நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்ற பாகத்திலிருந்தும்

19. ஒன்பது அம்சத்தினால் பத்ரங்களின் கனம் ஆகும் எனக் கூறப்படுகிறது. அல்லது வேறு முறையாகவும், யவையின் பாதி அளவு முதல் நான்கில் ஒன்று பங்காக யவையளவின் அதிகரிப்பால்

20. அங்குல அளவு வரையிலாவது சூலத்தின் நடுப்பகுதியின் கனமாகும். நடுபத்ரத்தினுடைய நடுவிலிருந்து பக்கத்திலிருக்கும் பத்ர நடு அளவு குறைந்ததாக இருக்க வேண்டும்.

21. நடு பத்ரத்தினுடைய நுனி, நடு அடிபாகத்திலும் இரண்டு பக்கத்திலும் ஒன்று, இரண்டு, மூன்று யவை அளவுகளாலோ மொட்டு போன்ற அமைப்பையோ செய்ய வேண்டும்.

22. பத்ரத்தின் அகலத்தை மூன்று, ஐந்து பங்காக்கி இரண்டு, மூன்று பாகங்களால் அடியில் கால்பாகம் நீளமாகும். அதன்பாதி பக்கவாட்டிலுள்ள பக்கங்களின் அளவாகும்.

23. அதன் பாதிபாக அகலமோ, கால்பாக அகலமாகவோ கூறப்பட்டுள்ளது. நடுவிலுள்ள பாதத்தின் இரு மடங்கால் பக்கத்திலுள்ள பாதங்களின் அகலம் கூறப்பட்டுள்ளது.

24. பத்ரங்களின் பாத அடியில் சித்ரவேலைப்பாட்டால் அழகுபடுத்த வேண்டும். பத்ர உயரத்தின் அரையளவால் பத்ரத்தின் அடியில் பாலிகை போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

25. பதினொன்று அம்சத்தில் ஓர் அம்சம் குறைந்ததாகவோ, இரண்டு மூன்று அளவுகளால் அதிகமானதாகவோ பலகையின் பரப்பளவை செய்து அதை ஒன்பதாக பிரித்து ஒன்றாகவோ அரை பாகமாகவோ

26. கால் பாகத்திலோ, முக்கால் பாக அளவாகவோ கனமுள்ளதாக கீழ்பாகத்தில் இரண்டு தாமரை அமைப்பை செய்து ஓர் பாகத்தால் விருப்பப்பட்ட அம்சத்தால் கர்ண அளவை செய்யவும்.

27. பாலிகையின் பாதியளவால் கும்ப அமைப்பையும் உயரத்தை முக்கால் பாகத்தாலும் அமைக்கவும். உயரத்தின் பாதி அளவால் கழுத்தும் முன்போல் அமைக்க வேண்டும்.

28. கும்ப அளவின் முக்கால் பாக அளவாலோ அரைபாக அளவாலோ கும்பமுகத்தை அமைக்க வேண்டும். தண்டின் அளவு கும்பத்தின் அளவு போல அதை சரிபாதியாக பிரித்தல் வேண்டும்.

29. ஓர்பாக இடைவெளியுடனோ அதே அளவுள்ளதாகவோ (மாலையை) தாமரையை அமைக்க வேண்டும். மாலைக்கு கீழ் தண்டத்தை முறைப்படி அமைக்க வேண்டும்.

30. மேல்பாக முகத்தின் ஓர்பாகமோ முக்கால் பாகமோ தண்டத்தின் அளவாகும். உலோக தண்டமாயிருப்பின் மேற்கூறியதில் பாதியளவும் அழகாக இருக்கும்படி அமைக்க வேண்டும்.

31. தண்டத்தின் அடியில் தாமரையை நடுவில் உள்ள தாமரையை போல் அமைக்கவும். அதன் பாதியளவு இடைவெளியில் எட்டிலொரு பங்கும் ஒன்பது பங்காகவோ பிரித்து செய்யும் அளவு

32. அகலம் ஆகும். அதற்கு சமமாக அரை பங்கோ, முக்கால் பங்கே, கால் பாகமோ அதற்கும் இடைப்பட்ட அளவோ உயரமாகும். அந்த உயரத்தை பத்தாக பிரித்து

33. ஓர்பாகம் பட்டிகையும், மூன்றில் இரண்டோ, இரண்டு பங்கு அம்சங்களாகவோ தாமரையை, வட்டவடிவமாகவோ, சதுர வடிவமாகவோ, இரண்டும் கலந்ததாகவோ அமைக்க வேண்டும்.

34. தாமரையின் ஸம அளவால் அதன் மேல் பட்டிகை அமைக்கவும். நடுபத்ரத்தின் நடுவில் அதன் முக அமைப்பால் தாமரையை வரைய வேண்டும்.

35. அல்லது நடுப்பக்கத்தின் அடியில் விருஷப வாகனத்தை பத்ரத்தின் உயரத்தில் ஒன்பது பாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என பாகமுள்ளதாகச் செய்ய வேண்டும்.

36. தேவியுடன் கூடியதாகவோ வ்ருஷபத்துடனோ இல்லாமலோ வேறு தேவரையோ லோக பாலர்களையோ, தசாயுதங்களையோ விருப்ப அளவுப்படி அமைக்க

37. அல்லது பாலிகையில் தென்கிழக்கு கோணங்களில் அரசிலை போல் அமைக்கவும். சுற்றிலும் நான்கு மாலையையோ அல்லது மாலையின்றியோ அமைத்தல் வேண்டும்.

38. டங்கமுகத்துடனோ தண்டத்தின் நுனியை செய்ய வேண்டும். பாலிகையின் மேல் மூலைகளில் வ்ருஷபத்தையோ செய்ய வேண்டும்.

39. சிலையினாலோ மண் முதலியவை களாலான சூலத்தின் விசேஷம் கொஞ்சம் கூறப்படுகிறது. நடுப்பத்ரத்தின் ஸமமான அளவாலோ, முக்கால் பாகத்தாலோ பாதி அளவாகவோ

40. கால் பாகமோ, எட்டில் ஒரு பங்கு அளவாகவோ தண்டத்தின் அகல அளவு இருத்தல் வேண்டும். அகல அளவின் சமமான உயரமும் அவ்வாறே விஸ்தாரமுமோ தண்டத்திற்கு இருத்தல் வேண்டும்.

41. எவ்வாறு தண்டத்தின் தடிமனோ அவ்வாறே பத்ரங்களின் கனமும் ஆகும். பாதத்தை அலங்கரிப்பவைகளில் பத்ரத்தில் கீழேயோ அமைக்க வேண்டும்.

42. சதுரமான சிலா பாகத்தில் சூலவடிவத்தை எழுதலாம். அதன் மற்ற பாகத்தில் வ்ருஷபத்தையோ எழுதலாம்.

43. அல்லது தண்டத்தின் அளவால் ஜடையுடன் கூடிய புருஷனை முன்பக்கமாக அமைத்து பின்பாக தண்டத்தின் மேல் சூலத்தை அமைக்கவும்.

44. வ்ருஷபத்தின் முன்னாலோ, பின்னாலோ, பலிபீடத்தின் முன்னிலோ சூலத்தை திடமாக ஸ்தாபிக்க வேண்டும். அதன் பிரதிஷ்டை விதி கூறப்படுகிறது.

45. மரங்களிலிருந்தும் சூலத்தை அதற்குண்டான விதிப்படி எடுத்துக் கொள்ளலாம். கூறப்பட்ட காலம், நக்ஷத்ரம், கிழமையில் அவ்வாறே அங்குரார்பணத்தையும்

46. ஆசார்யர் தண்டத்தை அஷ்டபந்தனம் முதலியவற்றால் ஸ்தாபிக்க வேண்டும். அதன் மேல் கீழ் பாகங்களில் ஸ்வர்ண பத்மத்தை (தங்கதாமரையை) வைக்க வேண்டும்.

47. ரத்ன நியாஸம் செய்ய வேண்டியதில்லை. அவ்வாறே நயோன்மீலனமும் ஆகும். அசையாத ஸ்தாபனமாகில் ரத்ன நியாஸத்தைச் செய்ய வேண்டும்.

48. சூலத்தில் பிரதிமை இருந்தால் அதற்கு நயோன்மீலனம் செய்ய வேண்டும். மண் முதலியவற்றால் சூலத்தை பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணை செய்ய வேண்டும்.

49. ஜலாதி வாஸத்தைச் செய்து பின் மண்டபத்தை அடைய வேண்டும். முன் சொன்ன அளவுப்படி ஐந்து, ஒன்று, ஒன்பது குண்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

50. சில்பியை திருப்தி செய்து அனுப்பிவிட்டு அந்தணர்களுக்கு உணவளித்து புண்யாஹம், வாஸ்து ஹோமத்தையும் செய்து வேதிகையில் ஸ்தண்டிலத்துடன் கூட

51. மயில்தோகை முதலான முட்டையிலிருந்து உண்டான ஐந்து வகையிலான சயனத்தை அமைத்து பிறகு பிம்பத்தைக் கொண்டு வந்து முன்சொன்னபடி அபிஷேகிக்க வேண்டும்.

52. ஆசார்யர் பிறகு ரக்ஷõபந்தனத்தைக் கட்ட வேண்டும். மூன்று பத்ம பத்ரத்திலோ பேரத்திலோ, விருஷபத்திலோ, ரக்ஷõபந்தனத்தைச் செய்ய வேண்டும்.

53. கிழக்கில் தலையாகவும் உயரப் பார்த்த முகமாய் சயனத்தில் பிம்பத்தை படுக்க வைக்க வேண்டும். வெண்மை, சிவப்பு நிறபட்டு வஸ்த்ரங்களால் அஸ்த்ர மந்திரத்தை உச்சரித்து மூடி

54. திரிசூலத்தின் தலைபக்கத்தில் வஸ்த்ரம், தங்கத்துடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட சிவாஸ்திரகும்பத்தை பூஜிக்கவும். நான்கு கைகள் உடையவராய், சந்திரனை தரித்தவராய்

55. நான்கு முகமுடையவராய் ஜ்வாலா கேசம், மூன்று கண்களுடன் விளங்குபவராய் தன் முகத்தில் தித்திப்பல் உடையவராய் சக்தி, சூலம், அபயம், வரதம் தரித்தவராய்

56. மின்னல் போன்ற காந்தியையுடையவராய் பயங்கரமான இடி சப்தத்தோடு கூடியவராய் பதினாறு வயதோடு கூடியவராய் பிரகாசிக்கின்ற ஸ்வஸ்திகத்தோடு கூடியவராய்

57. அஸ்திர சூலத்தில் ஈச்வரனின் உருவம் இருப்பின் சிவகும்பத்தையும் வர்த்தனியையும் வ்ருஷபமிருப்பின் வ்ருஷப கும்பத்தையும் அவைகளில் வரிசைப்படி சிவன், தேவி, வ்ருஷபர்களை பூஜிக்க வேண்டும்.

58. வஜ்ராதிகளை சுற்றியுள்ள எட்டு கும்பங்களிலும், தத்வேச்வர்களுடன் மூர்த்தி, மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

59. ஆசார்யர், முன்போல் பிரதிமையிலும் வ்ருஷபத்திலும், தண்டமத்யபாகம், நுனிபாகம், பத்ரங்களின் கடைசிகளில் தத்வதத்வேச்வரர்களை பூஜிக்க வேண்டும்.

60. சூலத்தின் மூர்த்திகள் முன்பு போல் க்ஷமா முதலானவர்கள். சூலத்தின் மூர்த்தீச்வரர்கள் வஜ்ரம் முதலானவர்கள் ஆவர். இவ்வாறு ஆசார்யன் நியஸித்து மூர்த்தி மூர்த்தீசர்களையும் சிவாஸ்த்ரத்தையும் பூஜிக்க வேண்டும்.

61. பிறகு வியாபாகத்தால் எல்லா தேவமந்திரங்களாலும் பூஜிக்கவும். மத்ய பத்ரத்தில் ருத்ரனையும் வலது பத்ரத்தில் பிரம்மாவையும்

62. இடது பாகத்தில் விஷ்ணுவையும் ஆவாஹித்து, பாலிகையில் பார்வதியையும், கும்பபிரதேசத்தில் ஷண்முகரையும், கும்ப அமைப்பின் முகத்தில் வினாயகரையும் பூஜிக்க வேண்டும்.

63. தண்ட நுனியில் சாஸ்தாவையும், தண்ட மத்தியில் ஆதித்யர்களையும், தண்ட அடியில் சிவ சண்டரையும் கிழக்கு தள நுனியில் லக்ஷ்மியையும்

64. தெற்குபாக தளத்தில் ஸப்த மாத்ருக்களையும் மேற்கு தளத்தில் ஜ்யேஷ்டா தேவியையும் வடக்கு தளத்தில் துர்க்கா தேவியையும் ருத்ரர், சூர்யர்கள், வசுக்களையும்

65. தண்டத்தினடியில் அச்வினீ தேவதைகளையும், பதிணெண் கணங்களையும் பூஜித்து, குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து முடிவில் ஹோமத்தை செய்ய வேண்டும்.

66. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், பயிர் வகைகள் இவைகளுடன் புரசு, அத்தி, அரசு, ஆல் முதலானவற்றை கிழக்கு முதலான திக்குகளிலும்

67. எல்லா குண்டங்களிலும் புரசும் மற்றவையும் ஏற்புடையன. ஆசார்யர் பிரதான குண்டத்தில் சுவாமியை ஸாங்கமாகப் பூஜிக்க வேண்டும்.

68. கிழக்கு குண்டத்தில் பார்வதியையும், தெற்கில் பிரம்மாவையும், வடக்கில் விஷ்ணுவையும், மேற்கில் முருகனையும் (சேனானீ) தென்கிழக்கு குண்டத்தில் சூர்யனையும்

69. தென் மேற்கு குண்டத்தில் விக்னேசரையும், வடமேற்கு குண்டத்தில் மன்மதனையும் ஈசான குண்டத்தில் சண்ட ருத்ரரையும், மீண்டும் கிழக்கில் லக்ஷ்மியையும் தெற்கில் சப்தமாத்ருக்களையும்

70. மேற்கு குண்டத்தில் ஜ்யேஷ்டா தேவியையும் வடக்கு திக்கில் துர்க்கா தேவியையும் அந்தந்த திக்குகளில் லோகபாலர்களையும் முன் சொன்ன எண்ணிக்கையுடன் ஹோமம் செய்ய வேண்டும்.

71. ருத்ரர்கள் ஆதித்யர்கள், அஷ்டவசுக்கள், அச்வினீ தேவதைகள், பதினெட்டு கணங்களுக்கும் பிரதான குண்டத்தில் ஒவ்வொரு ஆஹுதியை செய்ய வேண்டும்.

72. வ்ருஷாரூடர் முதலானவர்களுக்கும் முன் போல் ஆசார்யர் ஹோமம் செய்யவும். பத்மத்தில் வஜ்ராதிகளையும் எல்லா தேவர்களையும் முன்போல் பூஜிக்க வேண்டும்.

73. அந்தந்த கும்ப ஜலத்தினால் சூலத்தை முறைப்படி அபிஷேகிக்க வேண்டும். உத்ஸவமூர்த்தியான அஸ்த்ர தேவராக இருப்பின் ஸ்நபன அபிஷேகத்தையும் அதிகமான நைவேத்தியத்துடன் உத்ஸவத்தை செய்விக்க வேண்டும்.

74. இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும். இவ்வாறு திரி சூலஸ்தாபனத்தை எந்த மானிடர் செய்கிறாரோ அவர்

75. இங்கு எல்லா போகங்களையும் அனுபவித்து கடைசியில் மோக்ஷத்தை அடைவர்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் திரிசூல ஸ்தாபனம் செய்முறையாகிற அறுபத்தியொன்பதாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar