திருச்சானூரில் கார்த்திகை பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2025 01:11
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாத சேவையும் அதனை தொடர்ந்து சகஸ்ரநாமார்ச்சனை நடைபெற்றது. பின்னர் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அர்ச்சகர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக யானைகள், குதிரைகள் அணிவகுத்து வர கோயிலுக்குள் கொண்டு சென்றனர். பின்னர் கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள் அபிஷேகம் செய்து கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க, தலைமை அர்ச்சகர் கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் வீரபிரம்மம் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். இதைதொடர்ந்து பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலையிலும் இரவிலும் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.