மதுரையில் விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2025 02:11
மதுரை; கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோவிலில் துளசி மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு கடுமையான விரதம் இருந்து இருமுடி ஏந்தி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அதன்படி கார்த்திகைமாத முதல் நாளான இன்று அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதத்தை மேற் கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோவிலுக்கு சென்று விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாத முதல்நாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான கன்னி சுவாமிகள் முதன்முறையாக மாலை அணிந்து தங்களது 48நாட்கள் விரதத்தை தொடங்கினர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கோவில் வளாகத்திலயே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோன்று மதுரை புதூர் ஐயப்பன் கோவில், விளாச்சேரியில் உள்ள ஐயப்பன் கோவில் என பல்வேறு கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.