பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
02:07
கோதாவரி,:ஆந்திராவில் கோயில் பூஜாரியான கோபால் 9 முதுநிலை பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் யேலேஸ்வரத்தில் உள்ள லிங்கம்பர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் வி.எஸ்.ஆர்.கோபால். இங்குள்ள சீதாராமச்சந்திர சுவாமி கோயிலில் சாதாரண பூஜாரியாக உள்ளார். உயர்கல்வி மீது தணியாத தாகம் கொண்டவர்.
எம்.எஸ்சி., (உளவியல்), எம்.ஏ.,(தத்துவம்), எம்.காம்., எம்.ஏ (ஆங்கிலம்), எம்.ஏ.,(தெலுங்கு), எம்.ஏ., (அரசியல்), எம்.ஏ., (பொருளாதாரம்), எம்.எல்.ஐ.எஸ்சி.,(நுாலக அறிவியல்), எம்.எட்., என 9 பட்டம் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலை, ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலையின் தொலைதுார கல்வி மூலம் படித்துள்ளார். இவரது மகத்தான கல்வி தகுதியை பார்த்த பல முன்னணி நிறுவனங்கள் வேலை வழங்க முன் வந்தன. காக்கிநாடா அரசு மருத்துவமனையின் உளவியல் துறையில் வேலை தேடி வந்தது. ஆனால் கோயில் பணியில் மட்டும் ஆர்வமாக உள்ளார். தினமும் காலை 5:00 --மதியம் 1:00, மாலை 4:00-8:00 மணி வரை பூஜை செய்கிறார். உளவியில் புலமையால் பலருக்கு ஆலோசனையும் வழங்குகிறார். இவரது மனைவி இரட்டை எம்.ஏ., பட்டம் பெற்றவர். மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
கோபால் கூறுகையில்,இன்னும் 6 முதுநிலை பட்டம் பெற இலக்கு நிர்ணியித்துள்ளேன். எங்களது குடும்பம் பூஜாரி பணியில் ஏழு தலை முறைகளாக உள்ளது.
ஹிந்து தர்மத்தின் புனிதத்தை பரப்பி வருகிறோம். இந்த பணியை நானும் தொடர விரும்புகிறேன்,என்றார்.பூஜாரி பணியை தொடர்ந்து கொண்டே முதுநிலை பட்டம் பல பெற்று, ஹிந்து தர்மத்தின் உயரிய கொள்கைகளை உலகிற்கு எடுத்துக் கூறும் கோபாலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.