உறவினருடன் சண்டை வரும்போது ‘நீ செத்தால் கூட, உன் முகத்தில் விழிக்க மாட்டேன்’ என கோபத்தில் சிலர் சொல்வர். சொன்னபடி பங்கேற்க மாட்டர். இது மிகவும் தவறு. யூதர் ஒருவரின் இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்த நாயகம் எழுந்து நின்றார். இதைப் பார்த்த தோழர்கள், “நமது கொள்கைகளை எதிர்க்கும் ஒருவரின் உடல் எடுத்துச் செல்லப்படும்போது, நீங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்” என்று கேட்டனர். ‘‘எதிரியாக இருந்தாலும் அவர் மனிதராயிற்றே’’ என்று பதில் அளித்தார். அறிமுகம் இல்லாதவர்கள் மரணம் அடைந்தால் கூட இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் அடக்கம் செய்யும் வரை காத்திருக்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவருக்கு ஒரு மடங்கு நன்மையும், அடக்கம் செய்யப்படும் வரை இருப்பவருக்கு இரு மடங்கு நன்மையும் கிடைக்கும்.