பதிவு செய்த நாள்
10
ஆக
2021
11:08
உசிலம்பட்டி: உசிலம்பட்டி புத்துார் மலையடிவாரத்தில் குகை ஓவியங்கள், சமணர் சிற்பங்கள் உள்ள பகுதியை பராமரிக்கவும் தொல்லியல் சின்னம் உள்ள பகுதியாக அறிவிக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இம்மலையடிவாரத்தில் பாலமரத்தான் கருப்பசாமி கோயில் பின் பகுதியில் உள்ள பாறை குகையில் பழங்கால மக்களின் பாறை ஓவியங்கள், சமணர்கள் சிலைகள் உள்ளன. ஆண்டிப்பொடவு எனக்கூறும் இப்பகுதி மக்கள் அவ்வப்போது பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்: பழங்கால மக்களின் ஓவியங்கள் உள்ளன. விலங்கின் மேல் மனிதன் செல்வது, வேட்டைக்கு வில்லுடன் நிற்பது என இந்த ஓவியங்கள் காட்சியளிக்கிறது. குகையில் நான்கு சமணர்களின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. கர்நாடக மாநிலம் சரவணபெலகொலா கோமதீஸ்வரர் சிலை போல நின்ற நிலை, அடுத்து தியானம் செய்வது போல் அமர்ந்த நிலையில் ஆதிநாதர், ஐந்து தலை நாகம் படத்தின் குடையின் கீழ் பாசுவநாதர், அடுத்து மகாவீரர் ஆகியோர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை சிவன், விஷ்ணு, பிரம்மா என பின்னால் வந்தவர்கள் நேர்த்தியாக மாற்றி அமைத்துள்ளனர்.இந்த பகுதியில் வழிபாடும் இன்றுவரை நடந்து வருகிறது. பழங்காலத்திலிருந்து இன்றுவரை மக்களின் வழிபாட்டு பகுதியாக உள்ளதை காட்டுகிறது. பிற பகுதிகளில் உள்ள சமணர் படுகை போல் இந்த குகையின் மேற்புறம் மழைநீர் உள்ளே வராதபடி கற்களை செதுக்கியுள்ளனர் என்றார்.பழங்கால ஓவியங்கள், சிற்பங்கள் உள்ள இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை. இதனால் குகை ஓவியங்கள் மேலே வரைந்து பழமையை சேதப்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியை பழமை மாறாமல் பராமரிக்க பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்.