சிங்கம்புணரி: பிரான்மலை அருகே ஒரு கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வள்ளல் பாரியின் சமாதியாக இருக்கலாம் என அப்பகுதி தமிழாசிரியர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கடையேழு வள்ளல்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர் பாரி. அவர் ஆண்ட பகுதி பிரான்மலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாரியின் சமாதி குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அடிவாரத்தில் சமாதி போன்ற ஒரு அமைப்பை அப்பகுதியை சேர்ந்த தமிழாசிரியர் கண்ணப்பன் கண்டுபிடித்துள்ளார். பிரான்மலையின் கிழக்கு பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான வார்ப்பட்டு கிராமம் அருகே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. 4 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட 10 க்கும் மேற்பட்ட பழமையான கற்கள் 15 அடி விட்டத்தில் வட்டமாக அடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் நடுவில் பலகை கற்கள் சதுர வடிவில் மண்ணுக்குள் புதைந்துள்ளன. நடுகல் ஒன்றும் அதன் பழமையை பறைசாற்றி நிற்கிறது. இந்த அமைப்பை சுற்றி ஏராளமான முதுமக்கள் தாழிகளும் புதைக்கப்பட்டு, அவற்றின் மேல் பலகை கற்கள் வைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சிறு கற்களின் குவியல்களும் அதிகம் உள்ளது. பலர் இதன் அருமை தெரியாமல் கற்களுக்குள் புதையல் இருக்கிறதா என்று உடைத்து பார்த்துள்ளனர். சில நடுகல்கள் உடைக்கப்பட்டு வீட்டு கட்டுமானங்களுக்கு சென்று விட்டது.கண்ணப்பன் தெரிவித்தாவது: வேள் பாரி பற்றி ஆய்வுக்கட்டுரை தயாரிக்க களத்தில் இறங்கிய போது தான் இதன் முழு விபரம் தெரிந்தது. பாரி குறித்து ஏதாவது, ஓலைச்சுவடிகள், நாணயங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். சிலரிடம் இருப்பதாக தகவல் வந்தாலும் இல்லையென்று சொல்லிவிட்டார்கள். கல்வட்டம் அமைந்துள்ள பகுதி செங்கிடங்கு என்று அழைக்கப்படுகிறது.இங்கு பாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்பது எனது கணிப்பு. தமிழக முதல்வர் தொல்பொருள் துறையினர் மூலம் ஆய்வு நடத்தவேண்டும், என்றார்.