பதிவு செய்த நாள்
14
ஆக
2021
05:08
மதுரை: உடல் நலக்குறைவால் முக்தியடைந்த மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல், மடத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதின மடம். 1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இம்மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரி நாதர் இருந்தார். பத்திரிகையாளரான இவர், 1975ல் இளைய ஆதினமாக பொறுப்பேற்றார். 1980ல் மூத்த ஆதினம் சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் இறந்ததை தொடர்ந்து மடத்தின் பொறுப்பை ஏற்றார். இதன்பின் அரசியல்வாதிகள், பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் 2012ல் இளைய ஆதினமாக நித்யானந்தாவை நியமித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவரை நீக்கிவிட்டு, 2019ல் தருமபுரம் ஆதினத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தியை இளைய ஆதினமாக அறிவித்தார்.
சில ஆண்டுகளாக மூச்சுத்திணறால் அவதிப்பட்டவர், ஒருவாரத்திற்கு முன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருநாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முக்தியடைந்தார். உடல் ஆதின மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை கலெக்டர் அனீஸ் சேகர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பொது மக்கள், பல அமைப்பினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரது உடலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவை காமாட்சிபுரி, குன்றக்குடி, தருமபுரம் திருவாவாடுதுறை ஆதினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து தொன்மை வாய்ந்த பூப்பல்லக்கில் அவரது உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி முன்சென்றது. மதுரை முனிச்சாலையில் மடத்திற்கு சொந்தமான இடத்தில் , மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.