பதிவு செய்த நாள்
17
ஆக
2021
09:08
திருச்சி: கோவில்களில், தமிழ் முறையில் பூஜைகள் செய்ய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால், ஏற்கனவே அர்ச்சகர்களாக இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி, அர்ச்சகர்கள் சிலர் அழுது புலம்பும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்ய அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமிக்கப்படுவர் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், புதிதாக அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசை வாத்தியக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள், நேற்று காலை கோவில்களுக்கு சென்று, நித்திய பூஜை மற்றும் வழிபாட்டு பணிகளை துவக்கினர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் ஓதுவாராகவும், பெரம்பலுாரைச் சேர்ந்த சதீஷ்குமார், தவில் வாசிப்பவராகவும், அருண்குமார் நட்டுவாங்கம் இசைப்பவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, பெரம்பலுார் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களிலும், வெளியூரைச் சேர்ந்த பலர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கோவில்களில், ஏற்கனவே பணிபுரிந்த அர்ச்சகர்களிடம் இருந்து, சாவி உள்ளிட்ட பொறுப்புகள் பெறப்பட்டு, புதியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல்கள் பரவின.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், வயலுார் முருகன் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில்களில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாக, ஆதங்கத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி பேசும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
நேற்று, திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் என்பவர் கணேஷ்குமார் என்பவருடன் போனில் பேசும் ஆடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில், மலைக்கோட்டை கோவில், நாகநாதர் கோவில்களில், இன்று காலையே புதிய பணியாளர்கள் வந்து பணியில் சேர்ந்து விட்டனர். நாகநாதர்கோவிலில் காலை சந்தி முடிந்தவுடன், சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு, அவாளுக்கு டூட்டி போட்டு விட்டனர்.வயலுார் சுப்பிரமணியர் கோவிலிலும், ஐந்து குருக்களை வெளியே அனுப்பி விட்டனர். பிராமணர் அல்லாதவரை பணியமர்த்தி விட்டனர்.
சமயபுரத்திலும் மூலவர், ஆதிமாரியம்மன், பரிவார மூர்த்தி சன்னிதிகளிலும், குருக்களை வெளியேற்றி விட்டு, ஜே.சி., வந்து அவாளை பணியமர்த்தி விட்டார்.வயலுாரில், இன்று காலையில், இ.ஓ.,வே வந்து, சிதம்பரம், கார்த்தி போன்றவர்களை உள்ளே வரக் கூடாது என, கூறி வெளியே அனுப்பியிருக்கின்றனர் என்று முடியும் அந்த ஆடியோவில், இறுதியில் போன் செய்தவர், கதறி அழுவதும் பதிவாகி இருக்கிறது.
சாத்துாரில் சலசலப்பு: விருதுநகர் மாவட்டம் சாத்துார் வெங்கடாஜலபதி கோவிலில் ரெங்கநாதன் பட்டர், 67, பணிபுரிந்து வந்த நிலையில், இக்கோவிலுக்கு புதிய பட்டராக, துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதுாரைச் சேர்ந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் பணியில் சேர வந்தபோது, ரெங்கநாதன் பட்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம், கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி, அரசு வழங்கிய உத்தரவை காண்பித்தார். போலீசாரும் வந்து சமரசம் செய்ய, ரெங்கநாதன் பட்டர் வேதனையுடன் அங்கிருந்து வெளியேறினார். புதிய பட்டர் சீனிவாசன் பூஜைகளை செய்தார்.சீனிவாசன் கூறுகையில், புதுாரில் உள்ள பெருமாள் கோவிலில் 10 ஆண்டுகள் பூஜை செய்துள்ளேன். வைதிக முறைப்படி பூஜைகள் செய்ய பயிற்சி பெற்றுள்ளேன், என்றார்