பதிவு செய்த நாள்
17
ஆக
2021
10:08
சென்னை: மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் முன்னாள் அறங்காவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்ததை அடுத்து, அந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டதாக அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ளது, ஆதிகேசவப் பெருமாள் கோவில். இக்கோவிலில், தென்கலை சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. மிகவும் பழமையான கோவிலில், ஆலய மூலவருடன் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் வணங்கப்படுகிறார்.
வருவாய் இழப்பு: இக்கோவிலை, என்.சி.ஸ்ரீதர் என்பவர் தலைமையில், அறங்காவலர் குழு நிர்வகித்து வந்தது. அந்த அறங்காவலர்கள் குழு மீது, குற்றச்சாட்டுகள் எழுந்ததாகக் கூறி, இம்மாதம் 13ம் தேதி, கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், அறங்காவலர் குழுவினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இது குறித்து, அறநிலையத்துறை தரப்பில் கூறியதாவது: கோவில் அறங்காவலர் குழு மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, அறங்காவலர் குழு தலைவர் பதவி வகித்தது, சட்ட விதிகளுக்கு முரணானது. கோவிலின் சொத்துப் பதிவேட்டின் படி முறையாக பராமரிக்காமல், சொத்துக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்டாமல் இருந்துள்ளனர். கோவில் இடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்யவில்லை.இதனால், கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
குற்றச்சாட்டு: திருப்பணிக்கு தனி கணக்கு துவங்காமல், ஆண்டுதோறும் தொகை வசூலித்து, தன்னிச்சையாக செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவில் பணியாளர்கள் சம்பளப் பட்டியல் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. கோவிலுக்கு வர வேண்டிய வரவினங்களை, தனி நபர்கள் பயன்படுத்த உதவி செய்துஉள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டு மண்டலாபிஷேக வரவாக, மூன்று லட்சம் ரூபாய் பெறப்பட்டு, நிர்வாக திட்டத்திற்கு முரணாக ஒரு அறங்காவலரால் மட்டும், காசோலைகள் கையோப்பமிட்டு செலவிடப்பட்டுள்ளன. இதுபோன்று, பல குற்றச்சாட்டுக்கள் அறங்காவலர் குழு மீது முன் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், முறைப்படி அந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.இவ்வாறு, அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அறங்காவலர்கள் தரப்பு விளக்கம்: அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன், கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக இருந்தவரை நேரிலும், மொபைல் போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், முன்னாள் அறங்காவலர் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:ஆதிகேசவ பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் நடத்துவதற்காக, அறநிலையத்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுமதி கோரிய விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறங்காவலர் குழுவில் இருந்த நாதலீலா நாராயணகுப்தா, ரங்காச்சாரி ஆகியோர் காலமாகிவிட்டனர். உம்மிடி சுதாகர், அனந்தகுமாரி ஆகிய இருவரும் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இதையடுத்து, சம்பத்குமார், கிருஷ்ணன், சாந்திதேவி, ராமானுஜம் ஆகியோர் தான் அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். தற்போது, கோவில் அறநிலையத்துறை வசம் சென்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.