பதிவு செய்த நாள்
17
ஆக
2021
02:08
சென்னை-முறையாக பயிற்சி பெற்றவர்களே, கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகின்றனர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
தமிழகம் முழுதும், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக, விண்ணப்பங்களை வரவேற்று, அறநிலையத் துறை விளம்பரம் வெளியிட்டு உள்ளது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி, சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் பி.எஸ்.ஆர்.முத்துகுமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில், ஆகம விதிகளை பின்பற்றியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது. ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது என, கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை குறித்தும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட 15 அர்ச்சகர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்தும், நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் ஆறு அங்கீகாரம் பெற்ற அர்ச்சகர்கள் பயிற்சி மையங்கள் இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களில் சிலர், அங்கீகாரம் பெற்ற மையங்களில் பயிற்சி பெறாவிட்டாலும், மூத்த பட்டாச்சாரியார்களிடம் முறையாக பயின்றவர்கள் என்றும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, இதேபோன்ற வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.அதை ஏற்ற, நீதிபதி அனிதா சுமந்த், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.