பதிவு செய்த நாள்
19
ஆக
2021
03:08
பல்லடம்: சிதம்பரம் கோவில் இடிப்பு சம்பவம் குறித்து, கோவை காமாட்சிபுரம் ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிதம்பரம், சீர்காழி ரோட்டில், வீரனார் கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, வருவாய் துறையினர் நேற்று முன்தினம் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கோவில் அமைந்துள்ள இடம் மவுன மடத்திற்கு சொந்தமானது என்று கூறி, கோவிலை இடித்து அகற்றிய வை கண்டித்து, மடத்தை சேர்ந்த மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் போராட்டத்தில் ஈடுபட்டார். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் கண்டனம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ச்சியாக கோவில் இடிப்பு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சிதம்பரத்தில், கோவிலை பாதுகாக்க சுந்தரமூர்த்தி சுவாமிகள் நடுரோட்டில் நின்று தர்ணாவில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. இச்சம்பவத்தை, சிவனடியார்கள், ஆதீனங்கள், திருமட தலைவர்கள் உள்ளிட்டோர் ஒரு போதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கோவில் நிலம் அரசுக்கு தேவையென்றால், அதை உரியவர்களிடம் பேசி முடித்து, சம்மதம் பெற்ற பிறகே பணிகளை துவங்க வேண்டும். கோவிலை இடிக்க வேண்டும் என்றால், அதற்கான சாஸ்திர சம்பிரதாயங்கள், ஆகம விதிகளைப் பின்பற்றியே மேற்கொள்ள வேண்டும். இது எதையும் பின்பற்றாமல், கால் போன போக்கில் கோவில்கள் இடிக்கப்படுகின்றன. மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ரோட்டில் இறங்கி போராடும் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே, அவரது கோரிக்கையை ஏற்று இது குறித்து விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். ஆதீனங்கள் சார்பில் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.