பதிவு செய்த நாள்
20
ஆக
2021
12:08
பேரையூர் : மதுரை மாவட்டம் வில்லூர் பெரிய கண்மாயில் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி மற்றும் அஸ்வத்தாமன், நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். கி.பி., 9, 13, 16 ம் நுாற்றாண்டை சேர்ந்த துண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தனர்.
இது குறித்து முனீஸ்வரன் கூறியதாவது: வில்லுார் மேற்கிலுள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று கண் மடை உள்ளது. முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டியில் ஒருஅடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி., 9 ம் நூற்றாண்டு கல்வெட்டும், 2வது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில்3 வரி கொண்ட கி.பி., 13 ம் நூற்றாண்டு கல்வெட்டும் உள்ளன. இவை நீர் வழிந்தோடும் பகுதியில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளன. மூன்றாவது கண் மடையில் வலது புற சுவரில் ஒரு அடி அகலம்,3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி., 16 ம் நூற்றாண்டு கல்வெட்டில் சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன் என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டை படியெடுத்து ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்த போது எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும் என்ற ரீதியில் வரிகள் இருந்தது தெரிந்தது என்றார்.