பதிவு செய்த நாள்
20
ஆக
2021
01:08
சென்னை: நாளை (ஆக.,21) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழாவாக கேரளா மற்றும் தென்தமிழகத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை (ஆக.,21) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: கேரள மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கும் ஓணம் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரத்துவம் - சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுத்தவர் கருணாநிதி. எனவேதான் ஓணம் பண்டிகையை அவர்கள் மன நிறைவுடன் கொண்டாடுவதற்கு வசதியாக எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து 2006ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தார். அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில் - திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழக வாழ் மலையாள மக்களும், கேரள மக்கள் அனைவரும், நலமிகு வாழ்வும், அனைத்து வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். திருமால் வாமன அவதாரம் பூண்டு மகாபலி சக்கரவர்த்தியை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வண்ணம் மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்கவும், அவர்களை ஆண்டுதோறும் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி மக்களைக் காண வரும் நன்நாளே திருவோணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் களிந்த ஓணம் திருநாள் நல்வாழ்ந்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.