பதிவு செய்த நாள்
20
ஆக
2021
05:08
புதுச்சேரி-விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை தயாரிப்பு மற்றும் விஜர்சனம் செய்வது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது.இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்து, சிலைகளை நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது தொடர்பாக, திருத்தப்பட்ட விரிவான நெறிமுறைகளை மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது.விநாயகர் சிலை செய்ய, இயற்கையான மூலப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.சிலைகளை தயாரிக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.சிலைகளை அலங்கரிக்க இயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.விநாயகர் சிலை தயாரிப்பவர்கள் நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்துகளில் முன்பே பதிவு செய்ய வேண்டும். பூக்கள், இலைகள், உடைகள், காகிதத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், மக்கும் பொருட்கள் போன்ற வழிபாட்டு பொருட்களை, சிலையை விஜர்சனம் செய்யும் முன்பு அகற்றி, அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.