அன்று ஆவணி அவிட்ட நன்னாளை ஒட்டி பக்தர்கள் காஞ்சி மடத்தில் கூடியிருந்தனர். அவர்களிடம் மஹாசுவாமிகள், ‘‘சாஸ்திரப்படி நாம் செய்ய வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது காயத்ரி ஜபம். வேதங்களிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்ட மகாமந்திரமே காயத்ரி. இதை விட்டு விட்டால் நமக்கு கதி ஏது? ரிக், யஜுர், சாம வேத சாரமே இது. காயத்ரி என்றால் எவர் தன்னை கானம் பண்ணுகிறாரோ அவரை ரட்சிப்பது என்பது பொருள். கானம் பண்ணுவது என்றால் பாடுவது இல்லை. பக்தியுடன் உச்சரிப்பது. யார் தன்னை பக்தியுடன் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரட்சிக்கும்.
இதைப் பற்றி வேதத்தில், ‘காயத்ரீம் சந்தஸாம் மாதா’ என்று வருகிறது. சந்தஸ் என்றால் வேதம். மந்திரங்களுக்கு எல்லாம் தாய் காயத்ரி என்கிறது வேதம். இருபத்தி நான்கு அட்சரங்கள் கொண்ட இம்மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக்கள் கொண்ட மூன்று பகுதிகள் உள்ளன. சகல வேத மந்திர சக்தியும் இதில் அடங்கியுள்ளது.
மற்ற மந்திரங்களுக்கு சக்தியைக் கொடுப்பதும் இதுவே. இதை ஜபிக்காவிட்டால் மற்ற மந்திர ஜபத்திற்கும் சக்தி இல்லை. இதை சரியாக ஜபித்தால் மட்டுமே மந்திர ஸித்தி உண்டாகும்.
நெற்றியில் திருநீறோ, திருமண்ணோ இட்டால் சிலர் கேலி செய்கிறார்கள் என பலர் என்னிடம் புகார் சொல்கிறார்கள். பொதுவாக ஆஸ்திகர்கள் இந்தக் காலத்தில் கேலி செய்யப்படுகிறார்கள். இந்த நிலை ஏன் ஏற்பட்டது தெரியுமா? காயத்ரி மந்திரத்தை ஜபிக்காததால் வந்த கோளாறு. தினமும் காயத்ரி மந்திரம் ஜபித்தால் நிலைமை தானாக சரியாகும்.
ஒரு மண்டலம் அதாவது 48 நாள் தொடர்ந்து ஜபியுங்கள். அதன் பயனை உணர்ந்து நீங்களே தொடர்ந்து ஜபம் செய்வீர்கள். காயத்ரி ஜபத்தன்று 1008 முறை ஜபித்து நம் ஆன்மிக ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் மூன்று முறை ஜபிக்க வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். காயத்ரியின் மகிமையை யாராலும் அளவிட முடியாது. மஹாசுவாமிகளின் உரையைக் கேட்டு தினமும் காயத்ரி ஜபம் செய்வது என அவர்கள் உறுதி கொண்டனர்.