பதிவு செய்த நாள்
26
ஆக
2021
03:08
ஹிந்து சமயத்தை வளர்க்க, அறநிலையத் துறை சார்பில் ஆன்மிக தொலைக்காட்சி துவக்கும் திட்டத்தை, சட்டசபையில் அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது:பல ஆண்டுகளாக ஹிந்து சமயத்தை அறநிலையத் துறை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்தியது. கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட தீய செயல்கள் அரங்கேற, பக்தி கூட வியாபாரம் ஆகிவிட்டது தான் காரணம். இதை களைய, ஹிந்து சமய வளர்ச்சிக்கு, அரசு தனி கவனம் செலுத்துவது மிக முக்கியம். தற்போதைய திரைப்படங்களின் போக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சிகளில் ஆபாச, சட்ட விரோதமான, ஹிந்து கலாசாரத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப் படுகின்றன. இது, இளம் தலைமுறையினரின் மன நிலையில் தவறான, குரூரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
அதை தடுத்து, சரியான பாதைக்கு திருப்பி விட வேண்டும்.திருப்பதி, திருமலை தேவஸ்தானம், தனி தொலைக்காட்சி நடத்தி வருகிறது; பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, பக்தி மார்க்கத்தையும், நல்ல பண்புகளையும் வளர்க்கிறது. கடந்த ஆண்டு சட்டசபையில், அறநிலையத் துறை சார்பில், 8.77 கோடி ரூபாய் மதிப்பில் தொலைக்காட்சி துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத் துறை புத்துயிர் பெற்றுள்ளது. இந்த சூட்டோடு, அறநிலையத் துறை ஆன்மிக தொலைக்காட்சி துவக்கும் திட்டத்தை, சட்டசபையில் அறிவித்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் --