பதிவு செய்த நாள்
28
ஆக
2021
03:08
மதுரை:திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக தேதியை நிர்ணயிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துாரைச் சேர்ந்த நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், அறுபடை வீடுகளில் ஒன்று.இங்கு, 2009 ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிகள்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.இதன்படி, 2021ல் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால், அன்றாட பூஜைகள் நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது, கொரோனா தடுப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழிபாடு, பூஜைக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்கு முன், சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலை புனரமைத்து, வண்ணம் தீட்ட 18 மாதங்கள் ஆகும். புனரமைப்புப் பணியை மேற்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும். கும்பாபிஷேகத்திற்கான தேதியை நிர்ணயிக்க கோரி, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டுஉள்ளார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, அரசு குழு அமைத்து பரிசீலித்து வருகிறது என தெரிவித்தது. நீதிபதிகள், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர், திருச்செந்துார் கோவில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆறு வாரங்கள் ஒத்தி வைத்தனர்.