பதிவு செய்த நாள்
28
ஆக
2021
03:08
புதுச்சேரி: புதுச்சேரியை ஆன்மிகத்தின் தாயகமாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி அருணகிரிநாதர் திருப்புகழ் மன்ற நிறுவனர், ஓய்வு பெற்ற நீதிபதி சேது முருகபூபதி, கவர்னர் தமிழிசைக்கு அனுப்பியுள்ள கடிதம்;புதுச்சேரி 33 சித்தர்கள் வாழ்ந்து மறைந்த பூமி என்பது பலருக்கு தெரியாது. மகான் அரவிந்தர், அன்னை, ஆயி போன்றோர் வாழ்ந்த பகுதி. அருணகிரிநாத சுவாமிகள், நாடு முழுவதும் முருகன் கோவில்களுக்கு சென்று, பல பாடல்களை பாடியுள்ளார்.அவர், ஆண்டார்குப்பம், வடுகூர் என அழைக்கப்பட்ட திருவண்டார்கோவில் மற்றும் காரைக்கால் திருநள்ளாரில் திருப்புகழ் பாடியுள்ளார். தமிழன் தமிழால் இறையான்மை பாடியது, தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகும்.பல ஆண்டுகள் கழித்து எங்கள் மன்றத்திற்கு கலை பண்பாட்டு துறை மூலம் ஆண்டுக்கு ரூ. 8,000 வழங்கப்பட்டது. அதுவும் கடந்த 8 ஆண்டுகளாக வழங்கவில்லை. முதன் முதலாக புதுச்சேரி வந்தால், திருப்புகழ் வாங்கலாம் என்ற நிலையை திருப்புகழ் மன்றம் உருவாக்க அரசு உதவி செய்ய வேண்டும். புதுச்சேரியில் உள்ள 12 முருகன் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலில் அருணகிரிநாதர் சுவாமி, திருநெல்வேலியில் பிறந்து, புதுச்சேரிக்கு மாப்பிள்ளையாக வந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருஉருவ சிலையை நிறுவ வேண்டும்.திருப்புகழ் சந்தங்களை நாடகங்களில் இசை வடிவாக மக்களிடம் கொண்டு சேர்த்த நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நினைவு அரங்கம் அமைக்க வேண்டும். திருப்புகழ் மன்றத்திற்கு கலை பண்பாட்டு துறை மூலம் நிதி உதவி கிடைக்க செய்ய வேண்டும்.புதுச்சேரியில் சித்தர்கள் சித்தி அடைந்த நாட்களை ஆன்மிக திருவிழாவாக கொண்டாட வேண்டும். புதுச்சேரியை ஆன்மிகத்தின் தாயகமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.