திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, கிணற்றில் இருந்து சிவலிங்க கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த டி.வேலுார் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர், 45. இவருடைய விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில், நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் பார்த்தபோது, சிவலிங்கம் போல் ஒரு உருவம் இருந்துள்ளது. கிணற்றில் இறங்கி பார்த்தபோது, அது பழமை வாய்ந்த சிவலிங்க கற்சிலை என்பது தெரியவந்தது. மேலும் கிணற்றின் அருகே ஆவுடையாரும் கண்டெடுத்தனர். இது குறித்த தகவல், கிராம மக்களிடையே பரவியது. இதை தொடர்ந்து அந்த சிலையை கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.