பதிவு செய்த நாள்
01
செப்
2021
09:09
கோவை, செயின்ட் பால் கல்லுாரி சார்பில், அதன் தலைவர் டேவிட், கிறிஸ்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கிறிஸ்துவர்களே 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்று, கிறிஸ்துவர்கள் வாழும் ஊர்களில், வாகனங்களில் ஜெப யாத்திரை நடத்த வேண்டும். மூன்றாண்டுகளாக இந்த சிறப்பு ஜெப யாத்திரையை விநாயகர் சதுர்த்தியன்று நடத்தி வருகிறோம். கடந்த 2017ல், 200 வாகனங்களிலும், 2018ல் 1,000 வாகனங்களிலும், 2019லும் ஜெப யாத்திரை நடத்தினோம். இதன் விளைவாக, கலெக்டர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிலைகளின் அளவு, இடம், ஊர்வலம், கரைக்கும் நேரம் குறித்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சிலைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.இந்தாண்டு இதை விட சிறப்பாக, செப்., 8, 9, 10ம் தேதிகளில், ஏதாவது ஒரு நாள், உங்களின் வழியில், ஜெப யாத்திரை நடத்துங்கள்.இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.
மக்கள் சொல்வது என்ன?
தியேட்டர்களை திறக்கும் போது, விநாயகர் சிலை வழிபாட்டுக்கு தடை விதிப்பது நியாயமில்லை. கட்டுப்பாட்டுடன் சிலை வைத்து, பூஜை செய்து, கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டும். சிலையுடன், பொதுமக்கள் செல்லும் எண்ணிக்கையை போலீசார் தீர்மானிக்கலாம். பஜனை பாட, அன்னதானம், சுண்டல் வழங்க தடை விதிக்கலாம். கூட்டம் கூட அனுமதிக்க மாட்டோம் என, சிலை வைப்பவர்களிடம் எழுதி வாங்கலாம். போலீசார் கண்காணிப்பை அதிகரித்து, சிலை வைக்க அனுமதிக்க வேண்டும். எஸ்.குமாரராஜா, 61, வேளச்சேரி.
ஹிந்துக்களின் விழாக்களில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. இதை நாடு முழுதும் கொண்டாடுகின்றனர். விநாயகர் சிலைகளை வெளியில் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இது, காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதைய அரசு இதற்கு தடை விதித்துள்ளது எங்களை போன்ற பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அதனால், மறு பரிசீலனை செய்து, எப்போதும் போல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.ஆர்.ராமதாஸ், 46, குரோம்பேட்டை. பாரம்பரியமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அரசு தடை விதித்துள்ளது சரியல்ல; இது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல். கொரோனா நேரத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதைவிட்டு விட்டு, விழா கொண்டாடுவதற்கு முழுதுமாக தடை விதித்துள்ளதை ஏற்க முடியாது. இதை, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.எஸ்.மீனாட்சிசுந்தரம், 67, தாம்பரம்.
கோவில்களில் கூடும் போராட்டம்: விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்கக்கோரி, நாளை ஹிந்து முன்னணி சார்பில், கோவில்களில் கூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஹிந்து முன்னணி அறிக்கை:மதுக்கடைகள், தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், சந்தைகள் திறக்க அனுமதியுள்ளது. அதேபோல, பக்ரீத் தொழுகை, வேளாங்கண்ணி தேர் திருவிழா உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஹிந்துக்கள் கொண்டாடும் ஆடிப்பெருக்கு, கூழ் வார்த்தல் உள்ளிட்டவற்றோடு, விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், சிலை வைக்கவும், அரசு தடை விதித்துள்ளது. இது, தி.மு.க., அரசு ஹிந்துக்களுக்கு செய்யும் அநீதி. இதை எதிர்த்து, ஹிந்துக்களே கோவில்களில் கூடி, இறைவனிடம் முறையிடுவோம் என்ற போராட்டத்தில் பங்கெடுப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.