பதிவு செய்த நாள்
01
செப்
2021
09:09
சென்னை ;ஹிந்து சமயத்தை வளர்க்கவும், ஆன்மிகத்தை தழைக்கச் செய்யவும், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், விநாயகர் சதுர்த்திக்காக, களிமண் விநாயகர் சிலைகளை, ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். விநாயகர் என்றால், தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள். ஓம் எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. ஓம் எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார்.
குடும்ப விழா: விநாயகருக்கு சதுர்த்தி பிரதான விழா. ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது, விநாயகரின் ஜெயந்தி நாளாக கருதப்படுகிறது. மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப் பட்டிருக்கிறது. பின், பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் விநாயகர் வழிபாடு தொடர்ந்து நடந்திருக்கிறது. அதை தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில மக்களின் குடும்ப விழாவாக இது மாறியது. மக்கள் தங்கள் வீடுகளிலும், விநாயகரை வைத்து வழிபட ஆரம்பித்தனர்.
சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர், பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தியை மாற்றினார். அதன்பின், தென்மாநிலங்களிலும் கோலாகமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை நகரில், ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து, வழிபாடு நடத்தும் பழக்கம் வந்தது.
மன சாந்தி: கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பொருளாதாரம், வருமானம், இயல்பு வாழ்க்கை, சந்தோஷம் ஆகியவற்றை இழந்து தவிக்கும் மக்களுக்கு மனசாந்தி, நிம்மதி, ஆறுதல் தருவது ஆன்மிகப் பாதை மட்டுமே. விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதன் வாயிலாக, துவண்டு போயிருக்கும் மக்களுக்கு நல்ல சிந்தனைகளும், புத்துணர்ச்சியும் ஏற்படும். எனவே, மக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஏதுவாக, கோவில்களில் களிமண் விநாயகர் சிலைகளை இலவசமாக வழங்க, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆலோசிக்க வேண்டும்.
வடபழநி கோவில்: கடந்த ஆண்டு, நோய் தொற்றால் துவண்டிருந்த சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 250 பேருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், களிமண் விநாயகர், அருகம்புல், ஒன்பது நாட்களுக்கு வீட்டில் வைத்து விநாயகரை வழிபாடு செய்யும் முறை குறித்த சிறு புத்தகம் வழங்கப்பட்டது.இந்த நடைமுறை, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல, தமிழகத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், இந்தாண்டு களிமண் விநாயகர் சிலைகள் வழங்கி, ஹிந்து சமயத்தையும், ஆன்மிகத்தையும் காக்க வேண்டும் என, ஆன்மிக நல விரும்பிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமைச்சருக்கு கோரிக்கை: அறநிலையத் துறை என்றால் ஊழல், மோசடி, கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, சிலைகள் திருட்டு என, அடுத்தடுத்த நிகழ்வுகளால் கேலிப் பொருளாகி இருந்தது.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள சேகர்பாபு, 100 நாட்களில், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இவரால் பல கோவில்கள், புதுப்பொலிவு பெற்றுள்ளன; ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை, ஏழை, எளியவர்களும் கொண்டாடும் வகையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவசமாக விநாயகர் சிலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.