பதிவு செய்த நாள்
12
செப்
2021
03:09
மைசூரு : நஞ்சன்கூடில் இரவோடு, இரவாக அம்மன் கோவில் இடித்து தள்ளப்பட்டுள்ளது. மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் செயலை அப்பகுதி பக்தர்கள் கண்டித்தனர்.
மைசூரு நஞ்சன்கூடின், நெடுஞ்சாலை - 57ல், ஹரதனஹள்ளி உச்சகனியில், மஹாதேவம்மா கோவில் உள்ளது. இக்கோவிலை மாவட்ட நிர்வாகம், இரவோடு இரவாக இடித்துள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் ஜெ.சி.பி., இயந்திரத்தின் மூலம், புராதன கோவிலை இடித்ததாக கிராமத்தினர் குற்றம்சாட்டினர். மஹாதேவம்மா கோவில், புராதன பிரசித்தி பெற்றது. சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஹூச்சனிகே, ஹரதனஹள்ளி, கன்னெனுர், கப்பசோகே, சந்திரவாடி கிராமங்கள் உட்பட, பக்தர்களின் இஷ்ட தெய்வம்.
இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மாவட்ட நிர்வாகம் இரவோடு, இரவாக இடித்தது சரியல்ல.உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தால், பகல் நேரத்தில் கோவிலை இடித்திருக்க வேண்டும். இரவில் வந்து திருட்டுத்தனமாக இடிக்க வேண்டிய அவசியம் என்ன, என பக்தர்கள் கேள்வியெழுப்பினர்.இது தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமதாஸ் கூறியதாவது:இந்து கோவில்களை, திடீரென இடித்து தள்ளியது சரியல்ல. முதலில் கோவிலை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கப்படும். இல்லையென்றால் வேறு இடத்துக்கு இடம் மாற்ற ஏற்பாடு செய்யப்படும். இது இரண்டும் முடியாவிட்டால், கோவில் இடிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.