1963ல் ராமேஸ்வரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரர், அவரது சீடர்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு நடந்தது. இதற்காக ஜெய்ப்பூரில் இருந்து சலவைக்கல்லால் ஆன சிலைகள் லாரியில் கொண்டு வரப்பட்டன. வழியில் திண்டிவனம் – செங்கல்பட்டுக்கு இடையிலுள்ள அச்சரப்பாக்கம் அருகில் லாரி பிரேக் டவுன் ஆனது. அதற்கான காரணத்தை அறிந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். அசுரர்களிடம் இருந்த ‘முப்புரம்’ என்னும் பறக்கும் கோட்டைகளை அழிக்க புறப்பட்டார் சிவன், இதற்கு முன்னதாக விநாயகரை வழிபட மறந்தார். எந்த செயலை தொடங்கினாலும் தன்னை வழிபட வேண்டும் என்பதை உணர்த்த விரும்பிய விநாயகர் தேரின் அச்சை முறித்தார். அந்த இடமே ‘அச்சிறுப்பாக்கம்’ என்றாகி பின் அச்சரப்பாக்கமானது. இத்தலத்தில் லாரி பிரேக்டவுன் ஆனதற்கும் ஜெய்ப்பூரில் விநாயகர் பூஜை செய்யாததே காரணம் என்பதை அறிந்தனர். அச்சிறுப்பாக்கத்தில் விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர். அதன் பின் லாரி தடையின்றி ராமேஸ்வரத்தை அடைந்தது.