அந்த எழுத்தாளர் மொழிபெயர்ப்புத் துறையில் புகழ் பெற்ற சாதனையாளர். அவரது சகோதரர் அ.கி.கோபாலனின் ஆன்மிக நுால்களை வெளியிடும் பதிப்பகம் நடத்தி வந்தார். சகோதரர்கள் இருவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள். மதுரை வைத்தியநாதய்யர் ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த போது ‘காலமெல்லாம் தவம் கிடந்தோம் மதுரை மீனாட்சி’ என்றொரு பாராட்டுக்கவிதையை இவர் எழுதினார். கடின உழைப்பாளியான அவருக்குப் புகழ் கிடைத்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. தம் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதைக் கண்டு கண் கலங்கினார். அதற்காக மஹாபெரியவரைத் தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார். பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தாலும் மஹாபெரியவரின் பார்வை அவர் மீது விழுந்தது. அவ்வப்போது மஹாபெரியவரை தரிசிக்க வருவதால் எழுத்தாளரை நன்கறிவார். அவர் வங்க மொழி நாவல்களை மொழி பெயர்ப்பவர் என்பது அறிந்த விஷயம் தான். உதவியாளரிடம் எழுத்தாளரை அழைத்து வர பணித்தார். ‘‘ எப்போதும் வாழ்வு ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கை என்னும் சக்கரம் இடைவிடாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ளதும் கட்டாயம் மேலே போகும். கொஞ்சம் பொறுமை தான் வேண்டும். நீ கடுமையாக உழைக்கிறாய். மன அமைதியை இழக்காதே. பொருளாதாரம் தானே இப்போதைக்கு உன் பிரச்னை? விரைவில் அது தீரும். ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தை (21 ஸ்லோகம்) படி. இன்று முதல் உனக்கு நல்ல காலம் தான். ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனியை மழை போல கொட்டச் செய்த பாட்டு அது. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதே. பணக்கஷ்டம் தீர்ந்து நலம் பெறுவாய்’’ என்று எழுத்தாளரிடம் பிரசாதம் கொடுத்தார். இதற்கு முன் இது போல அனுபவம் எழுத்தாளருக்கு ஏற்பட்டதில்லை. எதுவும் சொல்லாமலேயே தன் மனதில் உள்ளதை அறிந்து தீர்வு சொல்லிய விதம் கேட்டு பரவசப்பட்டார். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். படிப்படியாக வாழ்வில் முன்னேறினார். சுதந்திரத் தியாகியும், சரத் சந்திரரின் நாற்பத்திரண்டு வங்காள மொழி நாவல்களைத் தமிழாக்கம் செய்தவரும், மொழிபெயர்ப்பாளருமான அ.கி.ஜெயராமன் தான் அந்த எழுத்தாளர்.