பதிவு செய்த நாள்
16
செப்
2021
03:09
பெங்களூரு: கர்நாடகாவின், ஒவ்வொரு தாலுகாவிலும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோவில்கள், மசூதி, சர்ச்களை வாரம் ஒன்றாக இடிக்கும்படி, இலக்கு நிர்ணயித்து அரசு தலைமை செயலர் ரவிகுமார் பிறப்பித்த குளறுபடியான உத்தரவால், அரசு தர்மசங்கடத்தில் சிக்கியது. எனினும், அந்த உத்தரவு பின், வாபஸ் பெறப்பட்டது.மாநில அரசின் தலைமை செயலர் ரவிகுமார், ஜூலை 1ல், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் எழுதியிருந்தார்.இக்கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோவில்கள், மசூதிகள், சர்ச்களை அடையாளம் காண வேண்டும். வாரம் ஒன்று வீதம் இடிக்க வேண்டும். ஜூலை 15ல் இருந்தே பணியை துவங்க வேண்டும். ஆகஸ்ட் 12க்குள், பணிகள் முடிந்திருக்க வேண்டும். பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.தலைமை செயலர் காலக்கெடு விதித்ததால், மாவட்ட நிர்வாகங்கள், அவசர, அவசரமாக கோவில்களை இடிக்கத் துவங்கின.குறிப்பாக மைசூரில் புராண பிரசித்தி பெற்ற கோவிலை இடித்தது, பெரும் சூறாவளியை கிளப்பியது. பொது மக்கள், பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் இதை வன்மையாக கண்டித்தனர். அதையடுத்தே, தலைமை செயலரின் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு மீண்டும் ஒரு உத்தரவு விதான் சவுதாவிலிருந்து பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு தான், அரசை தர்மசங்கடத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.