அயோத்தி :அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமான படத்தை வெளியிட்ட ராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்கள் அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த கோவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ராமர் கோயிலை கட்டும் பணிகள் துவங்கின. மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இந்த கோயிலை கட்டி வருகிறது. இந்நிலையில் ராமர் கோயிலின் அடித்தளம் கட்டமைக்கும் பணிகள் முடிந்துவிட்டதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலவரைக்குள் முடிவடைந்துவிடும் என்றும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் பக்தர்களின் தரிசனத்திற்காக இந்த கோயில் திறக்கப்படும் என்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.