பதிவு செய்த நாள்
22
செப்
2021
04:09
பல்லடம்: கோவில் பூஜைகளுக்காக உண்டாகும் செலவுகளை அனுமதிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பல்லடம் அடுத்த, நொச்சிபாளையம் கிராமத்தில், அறநிலைய துறைக்கு சொந்தமான கருப்பராயன் கோவில் உள்ளது. பழமையான இக் கோவிலுக்கு சொந்தமான, 8 ஏக்கர் நிலத்தில், 5.25 ஏக்கர் நிலம் பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட முன் அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள, 2.75 ஏக்கர் நிலம் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சூழலில், கோவில் பூஜைகள் நடக்க உண்டாகும் செலவுகளை அனுமதிக்க வேண்டும் என கிராம மக்கள் அறநிலைய துறை ஆய்வாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கருப்பராயன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தில் கோவில் பூஜைகள், விழாக்கள் நடந்து வந்தன. காவல் துறைக்கு நிலம் ஒப்படைக்கப்பட்ட பின், வருமானம் இல்லாமல் அன்றாட பூஜைகள், மற்றும் விழாக்கள் நடத்த மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. ஆண்டு முழுவதும் நடக்கும் நித்திய பூஜைகள், விழாக்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளை, அறநிலைய துறை ஏற்கவேண்டும். கோவில் நிலத்துக்காக பெறப்பட்ட, 3.15 கோடி ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டி பணத்தை கோவில் பூஜைகளுக்கு செலவு செய்ய வேண்டும் என்றனர். கோரிக்கை மனுவை பெற்ற ஆய்வாளர் சண்முகசுந்தரம், இது குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்றார்.