பதிவு செய்த நாள்
23
செப்
2021
03:09
கார்வார்: குமட்டாவின் பிரசித்தி பெற்ற, புண்ணிய தலமான கோகர்ணா மஹாபலேஸ்வரர் கோவிலில், பூஜை செய்யும் விஷயத்தில், இரண்டு அர்ச்சகர்கள் இடையே போட்டி எழுந்துள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனம், பிரசாத வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரகன்னடா பகுதியில் உள்ள கார்வாரின் கோகர்ணா, வரலாற்று பிரசித்தி பெற்ற புண்ணியதலமாகும்.
அர்ச்சகர்கள் மோதல் இங்குள்ள மஹாபலே ஸ்வரர் கோவில் கர்ப்பகுடியில் உள்ள ஆத்மலிங்கம் அருகில் அமர்ந்து பூஜை செய்யும் விஷயத்தில், இரண்டு அர்ச்சகர்கள் இடையே, போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களின் மோதலால், மஹாபலேஸ்வரர் கோவிலில் பூஜை, பிரசாதம் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் மாதக்கணக்கில் மூடப் பட்ட கோவில்கள், இப்போது தான் திறக்கப்பட்டு உள்ளது. பூஜை, புனஸ்காரங்கள், பிரசாதம் வினியோகம், அன்னதானம் போன்ற சேவைகளுக்கு, அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், கோகர்ணா மஹாபலேஸ்வரர் கோவிலில் மட்டும், சுவாமி தரிசனம், பிரசாத வினியோகத்துக்கு அனுமதியில்லை. தினமும் இங்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால், இவர்கள் வெளியே இருந்து, மஹாபலேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். ஆலோசனை கூட்டம் கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில், வரும் 27ல், ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் , இரண்டு அர்ச்சகர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல், பூஜை செய்ய , பிரசாத வினியோகத்துக்கு அனுமதி அளிப்பது பற்றி, ஆலோசிக்கப்படும்.