பதிவு செய்த நாள்
23
செப்
2021
04:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், ஐகுந்தம் கிராமத்திலுள்ள கல்வெட்டை ஆய்வு செய்தனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்த, முதலாவது முழு வணிகக்குழு கல்வெட்டு இது. ஏழு அடிக்கு நான்கடி அளவுள்ள கற்பலகையின் இருபக்கமும் கோடுகள் வரைந்து எழுத்துக்களை, 40 வரிகளில் அழகாக வெட்டியுள்ளனர். மேலும், 12ம் நுாற்றாண்டின் எழுத்தை கொண்ட கல்வெட்டின் முடிவில், சாமரம், பூர்ணகும்பம், குத்துவிளக்கு, பசுவும் கன்றும் உருவங்களை செதுக்கியுள்ளனர். கால்நடைகளை மீட்கும் போரில், தன்மசெட்டி, சிறியதம்பப்பன் மற்றும் இவனது தமையனும் இறந்து விட்டனர். இவர்களது உயிர் தியாகத்தை போற்றும் வகையில், ‘இவ்வீரதாவளம் திருப்பெறு மாடப்பள்ளித்தளத்து ஐநுாற்றுவர்’ என்ற வணிகக்குழுவினரால் உருவாக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. தமிழக வணிகக்குழு கல்வெட்டுக்களில் ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு சிறப்பிடம் பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தர்மபுரி அகழ்வைப்பக தொல்லியல் அலுவலர் பரந்தாமன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.