பல்லடம் பட்டேல் வீதியில் அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த இக்கோவிலை புணரமைக்க ஊர் பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீர்மானித்தனர். இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, புனரமைப்பு பணிகள் துவங்கின. கோவில் வளாகத்தில் இருந்த பழமையான கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய நால்வர் மண்டபமும் கட்டப்பட்ட நிலையில், தற்போது, கோவில் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகத்துக்கு தயாராகி வருகிறது. கும்பாபிஷேக தேதியை முடிவு செய்வதற்காக, கும்பாபிஷேக முகூர்த்த நிர்ணய மங்கள சிவயாக விழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, காலை, 7.15க்கு, திருவிளக்கு ஏற்று, கோ பூஜை மற்றும் ஸ்ரீமகா கணபதி பூஜை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது. மகா சங்கல்பம், ஸ்ரீ ஏகாதச ருத்ர கலச ஸ்தாபனம், ருத்ர பாராயணம், மகா பூர்ணாகுதி ஆகியவற்றைத் தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் பாலாலய மூர்த்திக்கு கலச அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. ஆரூர சுப்பிரமணிய சிவாச்சாரியார் நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தார். அருளானந்த ஈஸ்வரரின் ஆசியுடன், எதிர்வரும் ஜூன் 24 அன்று, கும்பாபிஷேக விழா நடத்துவது என, கோவில் திருப்பணி குழுவினர் தீர்மானித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திருப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.