பதிவு செய்த நாள்
23
செப்
2021
02:09
தொடுகாடு: தொடுகாடு ஊராட்சியில், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள பீமேஸ்வரன் கோவில் நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சியில் உள்ளது பீமேஸ்வரன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 60க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதுகுறித்து, அறநிலையத் துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில், நேற்று, அறநிலையத் துறையினருடன் இணைந்து வருவாய்த் துறையினரும் நில அளவீடு செய்யும் பணி நேற்று மேற்கொண்டனர்.திருவள்ளூர் நில எடுப்பு தாசில்தார் சுப்பிரமணியன், அறநிலையத் துறை செயல் அலுவலர் பிரபாகரன், வி.ஏ.ஓ., குமரன், அறநிலையத் துறை கணக்கர் முருகன் உட்பட வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து அளவீடு செய்தனர்.இப்பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம சேவை மையம் போன்ற அரசு கட்டடங்களே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மப்பேடு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.இதுகுறித்து தாசில்தார் சுப்பிரமணியன் கூறியதாவது: ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள பீமேஸ்வரர் கோவில் நிலத்தின் இன்றைய மதிப்பு 10 கோடி ரூபாய் இருக்கும். நிலம் ஆக்கிரமிப்பு குறித்து, அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்புவோம்.அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். பின், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.