பதிவு செய்த நாள்
27
செப்
2021
04:09
பல்லடம்: பல்லடம் அருகே, மண் பானையில் சோறு எடுத்த கிராம மக்கள், மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தில், மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக சென்று மண் பானையில் சோறு எடுத்து விநாயகரை வழிபட்டனர். அங்குள்ள விநாயகர் கோவிலில் பெண்கள், ஊர் மக்கள் ஒன்று கூடி, சாணத்தினால் செய்த பெரிய விநாயகரை முக்காலியில் வைத்து கும்மியடித்து வழிபட்டனர். பின், மண் பானையுடன் வீடு வீடாக சென்று பழைய சோறு சேகரித்து, மீண்டும் விநாயகர் கோவிலுக்கு வந்து,. சேகரித்த பழைய சோற்றை கலந்து அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்த ஆண்கள், பெண்களிடம் கை கழுவ தண்ணீர் கேட்கும்போது, தண்ணீர் இல்லை என்று பெண்கள் கூறினர். தொடர்ந்து, தண்ணீர் தேடி ஊர் எல்லைக்கு சென்று, அங்கு முறம், கூடை, விளக்குமாறு ஆகியவற்றை வைத்து அனைவரும் ஒப்பாரி வைத்தனர். சாணத்தால் செய்த விநாயகரை கிணற்றில் வீசி கரைத்த பின் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிராம மக்கள் கூறுகையில், மழை பொய்க்கும் போதெல்லாம் முன்னோர்கள் அறிவுறுத்தி சென்ற இந்த சடங்கை செய்து வருகிறோம். தண்ணீர் கிடைக்காமல் அனைவரும் ஊரை காலி செய்துவிட்டு செல்வது போன்ற ஐதீகம். இதேபோல், ஊரில் ஆட்டாங்கல்லை யாராவது தலைகீழாக போட்டிருந்தாலும் மழை வராது. அவ்வாறு, ஊருக்குள் கிடந்த ஆறு ஆட்டாங்கற்களை சேகரித்து சடங்குகள் செய்து ஆற்றில் போட்டோம். முன்னோர்கள் அறிவுறுத்தி சென்றபடி சடங்குகள் செய்த பின், இன்று மழை பெய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.