பதிவு செய்த நாள்
27
செப்
2021
05:09
சூலூர்: சூலூர் சிவன் மற்றும் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க அறநிலையத்துறை முதல் கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், ஸ்ரீ தேவி பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோவிலும், வைத்தியநாத சுவாமி கோவிலும் உள்ளன. பழமை வாய்ந்த இக்கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இரு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் சூலூர் தாலுகாவில் பல கிராமங்களில் உள்ளன. அவற்றில், சூலூரில், 24 எக்டர், கலங்கலில் 11.38 எக்டர், கண்ணம்பாளையத்தில், 30 ஏக்கர், செலக்கரச்சலில், 1.63 எக்டர் நிலங்கள் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன.தனிநபர்களின் பெயர்களில் பட்டா மாறுதலும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சூலூரில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் முதல் கட்ட நடவடிக்கையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலங்களின் பட்டாக்களில், தனிநபர்களின் பெயர்களை நீக்கம் செய்து, இரு கோவில்களின் பெயரில் பட்டா மாறுதல் செய்து தர, சூலூர் தாசில்தாரிடம் அறநிலையத்துறை சார்பில், கோவில் செயல் அலுவலர் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சூலூர் பெருமாள் கோவில் அறிவிப்பு பலகையில், சூலூர் தாசில்தாரின் அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், கோவில்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்களின் பட்டாக்களில், தாக்கலாகியுள்ள தனி நபர்களின் பெயர்களை நீக்கம் செய்வது தொடர்பாக, சம்மந்தப்பட்ட நபர்களோ அல்லது வேறு எவரேனும் ஆட்சேபணை தெரிவிக்க, இருப்பின், தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன், கிராம நிர்வாக அலுவலர், ஆர்.ஐ., தாசில்தார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அலுவலக ஆவணங்கள் அடிப்படையில், ஆட்சேபணை ஏதும் இல்லை, எனக்கருதி, உரிய மாறுதல்கள் செய்ய உத்தரவுகள் பிறப்பிக்க, நடவடிக்கை எடுக்கப்படும், என கூறப்பட்டுள்ளது.