பதிவு செய்த நாள்
28
செப்
2021
09:09
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு, காளியம்மன் கையில் உள்ள சூலம் மாற்றப்பட்டுள்ளதாக பணியாளர்கள் புலம்புகின்றனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவின்கீழ் செயல்படும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், 2012ம் ஆண்டு கோவிலில் பணிபுரிபவர்கள் மற்றும் வெளி ஆட்கள் தொடர்புடன் காளியம்மன் கையில் உள்ள சூலத்தை இரவோடு இரவாக திருடிவிட்டு, அதே அளவுடைய வேறு சூலம் செய்து வைத்தனர். ஐம்பொன்னால் செய்யப்பட்ட, பழமையான சூலம் திருடப்பட்டு உள்ளது.
இதில், கோவிலில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது என தெரிந்தும், திருத்தணி கோவில் அதிகாரிகள், 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் யாரை பாதுகாக்கின்றனர் என்று தெரியவில்லை என, வடாரண்யேஸ்வரர் கோவிலில் பணிபுரிபவர்கள் புலம்புகின்றனர். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன், பக்தர் ஒருவரிடம் ஊழியர் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து, இத்தகவல் வெளியே தெரிய வந்தது. இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், தற்போது உள்ள சூலத்தையும், முன்பிருந்த சூலத்தின் படத்தையும் வைத்து பார்த்தாலே தெரிந்துவிடும். பழைய சூலத்தின் நடுப்பகுதி வலது பக்கம் திரும்பி இருக்கும் என்றார். இது குறித்து திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ரமணி கூறுகையில், உடனடியாக ஆய்வு செய்யப்படும், என்றார்.