பதிவு செய்த நாள்
30
செப்
2021
02:09
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியிலுள்ள கோவில்களில், காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாதம் தோறும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி, காலபைரவருக்கு உகந்த நாளாக வழிபடப்படுகிறது. அந்நாளில், மாலை நேரத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
பொள்ளாச்சி ஜோதிநகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலபைரவர் சன்னதியில், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. சந்தன காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. வடசித்துார், குருநல்லிபாளையத்தில், ஸ்ரீகாலபைரவர் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜையில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வடசித்துார், குருநல்லிபாளையம், கோதவாடி, சேரிபாளையம், நெகமம் பகுதி பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர். சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆனைமலை, அங்கலக்குறிச்சி சமுக்தியாம்பிகை, காலசம்ஹார பைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, பைரவரை தரிசித்தனர். இதேபோல், ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.