பதிவு செய்த நாள்
30
செப்
2021
03:09
மேட்டுப்பாளையம்: சனிக்கிழமைகளில், காரமடை அரங்கநாதர் கோவிலைத் திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில பா.ஜ., விவசாய அணி செயற்குழு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்ட பெருமை வாய்ந்த கோயிலாகும். ராமானுஜர் மேலக்கோட்டை செல்லும்போது, இங்கு வந்து சென்றதாக வரலாறு கூறுகிறது. மேலும் காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம். சனிக்கிழமைகளில் கோவில் வளாகத்திலும், முன்பும் அமர்ந்திருக்கும் தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை, தலைவாழை இலையில் படையலிட்டு கொடுப்பதை, பெருமாளுக்கு கொடுப்பதாக ஐதீகம். வாசகர்களிடமிருந்து பக்தர்கள் சிறிது பெற்று, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, பொங்கலுக்கு விரதத்தை முடிப்பது வழக்கம். காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு இது சிறப்பாகும்.
மேலும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும், நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் அரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பத்தாவது நாள் விஜயதசமி அன்று, அரங்கநாத பெருமாள், குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பரிவேட்டை மைதானத்தில் எழுந்தருளும், வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும். எனவே புரட்டாசி மாதத்தில் உள்ள சனிக்கிழமை நாட்களில், காரமடை அரங்கநாதர் கோவில்களை திறந்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.